71
மக்கள் பெற்றிருந்த அத்தாழ்வறியா நிலை நெடிது நாள் நிற்கவில்லை. உள்நாட்டுப் போர்கள், அவர்கள் உணர்வினைத் தட்டி எழுப்பின. தொடர்ந்து நிகழ்ந்த போர்களாலும் பிறவற்றாலும் தொல்லை பல உற்ற அவர்கள், அத்துன்ப நிலையினைப் போக்கிக் கோடல் தம்மால் இயலாது என அறிந்தவுடனே, அதைப் போக்கி அருள் பண்ண வல்ல இறைவழிபாட்டினை மேற்கொண்டனர். அது காரணமாகவே, அக்காலத்தே தோன்றிய ஆன்றோர்கள் பலரும் இளமை நிலையாது, யாக்கை நிலையாது, செல்வம் நிலையாது என்பன போலும் நிலையாமை உணர்ச்சிகளையும் ஊட்டத் தலைப்பட்டனர். இவ்வாறு மக்கள் மாளாத் துயர் உற்று மனங்கலங்கி நின்ற அவ்வமயம் நோக்கி, வடநாட்டில் தோன்றி வளர்ந்த புத்த சமயத்தவரும், சமண சமயத்தவரும், தமிழ் நாட்டுள் புகுந்து, அத்தமிழர்களிடையே , தம் சமயக் கொள்கைகளைப் பரப்பும் பணியினையும் மெல்ல மெல்ல மேற்கொள்ளத் தொடங்கினர்.
தமிழ்நாட்டில், பன்னெடுங்காலத்திற்கு முன்னரே தோன்றி வளர்ந்து வாழ்ந்து வந்த சைவ, வைஷ்ணவ சமயங்கள், தாம் வாழும் தமிழகத்தில், சமணமும், பௌத்தமும் புகுந்து, மக்களிடையே இடம் பெறத் தலைப்படுதலைக் கண்டவுடனே, தாமும் தம் உறக்க நிலையினை ஒழித்து, ஊக்கத்தோடு வளரத் தொடங்கின. இவ்வாறு, சமயங்கள் பலவும், தம் வாழ்வும் வளர்ச்சியும் குறித்து ஒன்றோடொன்று போட்டியிட்டு முனையவே, அவ்வச்சமயச் சார்பான இலக்கியங்களும் அளவின்றித் தோன்றி வழங்கலாயின், நிற்க.