பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

சமயங்கள் பலவாயினும், அச்சமயங்களின் குறிக்கோள் ஒன்றே; மக்களை மக்கட் பண்புடையவராக்குவதே அவற்றின் குறிக்கோளாம். உலகில் பிறந்தார் அனைவரும் மக்கட் பண்புடையராகி விடார். அவரிடையே பிறப்பால் ஒற்றுமை நிலவினும், உணர்வால் ஒற்றுமை நிலவுவது இல்லை. எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்குமேனும், அவற்றின் செயல் வேறுபடுதலால், அவற்றிற்கு உண்டாம் சிறப்பு ஒத்தல் இல்லை; “பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்று மையான்.”

எண்ணத் தகுதிவாய்ந்த எண்ணங்கள் இவை; இயம்பத் தகுதி வாய்ந்த சொற்கள் இவை; இயற்றத் தகுதி வாய்ந்த செயல்கள் இவை; காணத்தக்க காட்சி இது; கேட்கத்தக்க கேள்வி இது; உண்ணத்தக்க உணவு இது; நுகரத்தக்க நறுமணம் இது என அறிந்து எண்ணவும், இயம்பவும், இயற்றவும் வல்லாரே மக்கட் பண்புடையராவர்; மக்களாய்ப் பிறந்தும், அம்மக்கட் பண்பு வாய்க்கப் பெறாதார் மக்களாகார்; மாக்களே ஆவர்.

“தக்க இன்ன தாகதன இன்ன என்று
ஒக்க உன்னலராயின் உயர்ந்துள
மக்களும் விலங்கே: மனுவின் நெறி
புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே”

மண்ணிடைப் பிறந்தார் அனைவரையும் மக்கட் பண்புடையராக்குவதே சமயங்களின் குறிக்கோளாம். எனினும், அப்பணி, அவற்றிற்கு மட்டுமே உரிமை உடையதொன்றன்று. அப்பணி மேற்கொண்டு கடனாற்றும் பிறவும் உள;