பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

மடிதற்றுத்தான் முந்துறும்,” என்னும் குறள் வழியே உளம் குன்றி இராது, ஊக்கம் கொண்டு உழைப்பார்க்கு இறைவனே முன்வந்து உதவுவன் என்றுகூறி, ஒருவன் செய்யக் கடவது. தனக்குற்ற கடனாற்றலே யன்றி, உருவத்தை வழிபட்டு நிற்பதன்று என்று அக்கடவுள் வழிபாட்டினை மறுக்கிறது.


பௌத்தமும், சமணமும் கூறும் பழவினைக் காரணத்தை ஏற்றுக் கொள்ளும் திருக்குறள், ஊக்கமும், உரமும் வாய்க்கப் பெற்றார், அப்பழவினை ஆற்றலையும் மாற்றி அமைப்பர் என அச்சமயக் கோட்பாட்டினை மறுக்கிறது. “ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான் முந்துறும்” என்ற குறள்வழியே, முற்பிறவிற் செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்பவே, இப்பிறவியில் உயர்நிலையும், இழிலையும் வந்து வாய்க்கும்; இப்பிறவியில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் முன் வினைக்கு ஏற்பவே பயனளிக்கும்; ஆகவே, இப்பிறவியில் மேற்கொள்ளும் முயற்சிகளால், முற்பிறவியின் வினைப் பயனால் வந்து வாய்த்த நிலையினை மாற்றிவிடுதல் இயலாது. அம்முன் வினைக்கு எதிராக எடுக்கும் எந்த முயற்சியும் அழிந்தேபோம் என்றெல்லாம் கூறி, ஊழ் உண்மையினையும், அதன் ஆற்றலையும் எடுத்துரைத்த திருக்குறள், “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்றுபவர்” என்ற குறள் வழியே, ஓயாது உழைக்கும் உரவோர், தாம் முற்பிறவியில் செய்த தீவினையின் ஆற்றலால், தாம் எடுத்த முயற்சி முடியப்பெறாது வருந்த வேண்டுவதற்கு மாறாக, அப்பழவினை ஆற்றலைக் கெடுத்து,