பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

எண்ணிய எண்ணியாங்கே எய்தும் திண்ணியராவர் என்று கூறி அவ்வூழை மறுப்பதும் காண்க.

இவ்வாறு மக்களை மக்கட் பண்புடையராகத் துணைபுரியும் சமயக் கொள்கைகளை ஏற்றுப் போற்றியும், அம்மக்களை மாக்களாக மாற்றத் துணைபுரியும் சமயக் கொள்கைகளை ஏலாதுவிடுத்தும் எழுந்த திருக்குறள், உலக மக்களை உயர்நிலைக்கு உய்க்கும் உயர்ந்த அறங்கள் பலவற்றையும் உரைத்துச் செல்கிறது. மக்கள் ஆணும் பெண்ணுமாய், இல்லறத்தானும் துறவறத்தானுமாய், அரசனும், அமைச்சனும் அவன் கீழ்ப்பணிபுரிவோனுமாய் வேறு வேறு நிலையினராயினும், அவரெல்லோரும் மக்கள் என்ற ஒருமைப்பாடுடையராதலின், அவரெல்லோர்க்கும் ஏற்புடைய பண்பாடுகளைப் பொதுவாகப் பெருகக் கூறி, அவரவர்கள் நிற்கும் பல்வேறு நிலைகளுக்கும் ஏற்ற சிறப்புடைய பண்பாடுகளைத் தனித்தனியே வகுத்துக் கூறிச் செல்கிறது.

இவ்வாறு முக்கால மக்களுக்கும், முழுதுலக மக்களுக்கும் ஏற்கும் பண்பாடுகளை எடுத்துக் கூறும் திருக்குறள், ஓர் அற நூலேயாயினும் அது, தான் உரைக்கும் அவ்வறங்களைச் சொல்லழகும், பொருளழகும் பொருந்த உவமையும், உருவகமும் முதலாம் அணி அழகு அமையக் கற்பார்க்குக் கற்குந்தோறும் கழிபேரின்பம் பெருகுமாறு கூறிச் செல்வதால், இறப்ப உயர்ந்த இலக்கியமாக இலங்குகிறது; நிற்க.