பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

சமயத் தலைவர்கள் பலரும் தத்தம் சமயக் கொள்கைகளை, மக்களிடையே பரப்பப் பெரு முயற்சி மேற்கொண்டு வாழ்ந்த காலத்தில், ஆன்றோர் சிலர், மக்களை மக்கட் பண்புடையராக்கும் அறநூல்கள் பல ஆக்கும் பணியினை மேற்கொண்டனர். அது கண்ட சமயத்தலைவர்களும் தம் சமயக் கருத்துக்களைப் பரப்ப இலக்கியத் துணையினை நாடினர். அதன் விளைவாய் உலகியல் உணர்த்தும் இலக்கியங்களுக்கிடையே சமயக் கருத்துணர்த்தும் இலக்கியங்கள் எழலாயின. பத்துப் பாட்டினுள் முதற்கண் வைத்துச் சிறப்பிக்கப் பெறுவதாய முருகாற்றுப் படையும், பரிபாடலுள் 5, 8, 9, 14, 17, 18, 19, 21 என்ற எண்ணிடப் பெற்ற எட்டுப் பாடல்களும், அவ்வாறு வந்த சைவ சமயச் சார்புடைய இலக்கியங்களாம்; அப்பாடற்கண்வரும் 1, 2, 3, 4, 13, 15 என்ற எண்ணிடப் பெற்ற ஆறு பாடல்களும் வைஷ்ணவ சமய வளர்ச்சி குறித்து வந்த இலக்கியங்களாம். இவ்வாறு எழுந்த சமய இலக்கியங்களெல்லாம், அவ்வச் சமயச் சார்பான கடவுளரின் பெருமையினைப் பாராட்டிக் கூறும் வழிபாட்டுப் பாடல்களாகவே அமைந்து விட்டன.அக்கடவுளரின் வரலாற்றினை விளங்க உரைக்கும் வகையினை அவை மேற்கொள்ளவில்லை. அவ்வாறு எழுந்த அச்சமய இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள் தோன்றிய காலத்திலேயே தோன்றிவிட்டமையாலும், செய்யுள் நடையாலும், சொல்லாட்சியாலும் அவற்றோடு பெரிதும் ஒத்திருந்தமையாலும் இவற்றையும் சங்க இலக்கியங்ககளாகவே மதித்தனர் மக்கள்.