பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

இடம் பெறுமாறு இயற்றினர். அவ்வாறு எழுந்த இலக்கியங்களே சிலப்பதிகாரமும், மணிமேகலையும்.

“அறம் செய விரும்பு”, “ஆறுவது சினம்” என அறவுரைகள் பலவற்றை அடுக்கி அடுக்கி உரைப்பதினும், அவ் அறம் விளங்கும் சிறு சிறு கதைகளைக் கூறி அவற்றின் வழியே அவ் அறங்களை உரைப்பதே கருதிய பயனை உண்டாக்கும் என உரைப்பர் உளநூல் அறிந்தார். இவ்வுண்மை யுணர்ந்த சமணரும், பௌத்தரும், அக்காலத்தே மக்களிடையே பயில வழங்கப் பெற்ற கண்ணகி மணிமேகலை வரலாறுகளை வகுத்துரைப்பார் போல், தம் சமயக் கடவுளர்க்கும், தம் சமயக் கொள்கைகட்கும், மக்கள் மன்றத்தே மதிக்கத்தக்க இடம் தேட முனைந்தனர்.

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவால் தொடங்கி, வரி குரவை எனும் இசைப் பாடல்களையும் இடையிடையே கொண்டு, அகவற்பாவான் ஆக்கப் பெற்று, முப்பது காதைகளைக் கொண்ட ஒரு பெரு நூலாய்த் தோன்றிய சிலப்பதிகாரம், கண்ணகி வரலாற்றினைக் காவியப் பொருளாகக் கொண்டு இயற்றப் பெற்றுளது. கண்ணகி கற்பு, கோவலன் குறை, மாதவி காதல், செழியன் செங்கோல் முதலாயினவற்றைக் கூறும் சிலப்பதிகாரம், ஊழின் சிறப்பை உயர்த்திக் கூறும் சமணச் சார்புடைய பெருநூலாம்.

அந்நூலை இயற்றிய ஆசிரியர் இளங்கோவடிகள் ஒருவர் முற்பிறவியில் செய்த நல்வினை தீவினைகளாய பயன், இப்பிறவியில் அவரை விடாது வந்து பற்றும்