பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

வாகக் கூறிச் சிலப்பதிகாரம் போல், மக்களால் சுவைத்துப் பயிலப் பெற்றிலது.

சிலப்பதிகாரமும், மணிமேகலையும் வடநாட்டில் தோன்றி வளர்ந்த சமயச் சார்புடைய நூல்களாதலின், சங்க இலக்கியங்களில் காணப்பெறாத வடவர் வழக்கும், வடமொழி வழக்கும் அவை இரண்டிலுமே இடம் பெற்றன. எனினும், அவ்விரண்டனுள்ளும், பின்னது சமயக் கொள்கைகளை விளக்குவதற்கே பெரும்பகுதியைக் கொண்டு விட்டமையால், அவ்வட மொழி ஆட்சி, முன்னதினும் மிகுதியாக அதில் இடம் பெற்றுவிட்டது. அதனால் தனித் தமிழாட்சி விரும்பும் தமிழ் மக்களிடையே மதிக்கத்தக்க இடம் பெறவும் அது தவறிவிட்டது.

சிலப்பதிகாரமும், மணிமேகலையும் கூறும் சமயங்கள் தமிழகத்துள் புதியவாக வந்து புகுந்த சமயங்கள் ஆதலாலும், அவை புகுந்த காலத்தே, சிவவழிபாடும், திருமால் வழிபாடும் தமிழரிடையே சிறந்த இடம் பெற்று விளங்கினமையாலும், ஒரு நாட்டில் வாழும் மக்கள் விரும்பும் ஒரு பொருளை, அம்மக்களின் நன் மதிப்பைப் பெற வேண்டிப் புகுந்த புதியர், மறுத்தல், அவர் முன்னி வந்ததை முடியாதாக்கி விடும் ஆதலாலும், சமண, பெளத்த சமயங்களேப் போற்றிப் புகட்டும் சிலம்பும், மேகலையும் தமக்குப் புறம்பான சைவ, வைஷ்ணவ சமயங்களைப் பழித்துரைப்பதை மேற்கொள்ளவில்லை; மாறாக, கூடும் அளவு அவற்றைப் பாராட்டிச் செல்வதையே மேற்கொண்டுள்ளன.