பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89

திருவிளையாடல் புராணமும், கந்த புராணமும். இவற்றுள் சில பிற்காலத்தனவாம். இவ்வாறு வடநாட்டு வரலாறுகளை விளங்கக் கூறியதன் விளைவால் தனித்தமிழ் ஆட்சி மேலும் குன்றி, வடமொழி ஆட்சியே வளர்ந்து வன்மையுற்றது. நிற்க.

இக்காலத்தே இலக்கியத் துறையிலும் ஒரு புதுமை காணப்பட்டது; சமய இலக்கியங்களோடு வேறுவகை இலக்கியங்கள் சிலவும் இடம்பெற்றன. கடைச் சங்க காலத்தே தோன்றிய இலக்கியங்கள், நிலையாமை உணர்ச்சிகளைத் தொடர்ந்து ஊட்டி வந்தமையால், பழந்தமிழ் அரசர் தம் ஆற்றல் குன்றினர். அவர் ஆற்றல் குன்றவே களப்பிரர் இடையீடு இடம் பெற்றது. அதனால், தமிழ்நாட்டில், அரசியல் வளர்ச்சியும் இலக்கிய வளர்ச்சியும் தடையுற்றன. இந்நிலை மாறவேண்டின், நாட்டில் நல்லரசு நிலவவேண்டும். நல்லரசு வேண்டும் நாட்டில், அரசர் ஆற்றல் மிக்கவராதல் வேண்டும்! அவர் அன்னராக, அவர் உள்ளம் ஊக்கமும் உரமும் கொண்டு உயருமாறு, அவர் ஆண்மை போற்றிப் புகழப் பெறுதல்வேண்டும்; வெற்றியை விளங்கப் பாடுதல் வேண்டும். இதை அறிந்த அக்காலப் புலவர்கள், சமய இலக்கியங்களை வளர்ப்பதற்கிடையிடையே, அரசர் புகழ்பாடும் இலக்கியங்களையும் இயற்றத் தொடங்கினர்; கலிங்கத்துப் பரணி, மூவர் உலா, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் முதலாம் இலக்கியங்கள் இவ்வெண்ணத்தின் விளைவால் வந்தனவே.

இமயத்தில் கொடி நாட்டியும், ஈழம் வென்றும், ஒரு காலத்தே வெற்றிப் புகழ் விளங்க வாழ்ந்த தமிழ்ப்