பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

வளர்ந்து விட்டது. அதனால், தமிழகத்தில், தமிழ் மொழியாட்சி. தளர்ந்தது; வடமொழியாட்சி வலுத்தது, பிற்காலச் சோழரும், பாண்டியரும் நாடாண்டிருந்த காலத்தே தோன்றிய இத்தாழ்நிலை, தொடர்ந்து நிலைபெறுவதாயிற்று; அதனால், கூறிய இக்காலத்தில், தமிழ் இலக்கியம், பண்டு தான் பெற்றிருந்த இயற்கை எழில் இழந்து இழிநிலை உற்றது.

அம்மட்டோ! பதினான்காம் நூற்றாண்டிற்கும், பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கும் இடையே உள்ள காலம், தமிழ்ப் பேரரசு மறைந்து போக, நாயக்கர்களும், மராட்டியர்களும், மகமதியர்களும், ஆங்கிலேயர்களுமாகப் பல்வேறு மொழி வழங்கும் பல இனத்தவர் படையொடு போந்து, ஒருவரை ஒருவர் அழித்து வென்று அரசோச்சிய காலமாகும். நிலைத்த ஆட்சியில்லாக் குறையால் நாட்டில் அமைதி குன்ற, அல்லலும், அலைச்சலும் மிகுந்து அருங்கலை வளர்ச்சி தடையுற்றது அக்காலத்தில்; அதன் பயனாய், வடமொழி நாகரிகத்தால், வனப்பிழந்து, வளங்குன்றிக் கிடந்த தமிழ் இலக்கியம், மேலும் தன் இயல்பு கெட்டு இழி நிலை உற்றது.

அரசவைகள் தமிழ்ப் புலவர்களைப் பேணத்தவறிவிட்டன; புலவர்கள் போற்றுவார் அற்றுப் புலம்பினர்; அதனால் நல்ல புலவர்கள் நாட்டில் தோன்றாராயினர். ஆங்காங்கிருந்த ஒரு சில செல்வர்களும், தமிழ் மரபு மறவாக் குறுநிலத் தலைவர்களும் தந்த சோறுண்டு வாழ்ந்த புலவர் சிலர் பாடிய பாக்களும், தனித் தன்மையும் தமிழ்ப் பண்பும் இழந்து காணப்பட்டன. பொருள் வளம் ஒன்றையே