பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிகிரிக் குன்றம்

97

காவியத்தை ஓவியத்திலே காட்டுகின்றன. இடுப்புக்குக் கீழே தெரியாமல் ஓவியங்களைத் தீட்டியிருக்கிறார்கள். கால் நிலம் படாக் ககனத்து அரம்பையர் என்ற குறிப்பாக இருக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். வண்ணமலர்த் தட்டேந்திப் பணிப்பெண் செல்ல, கோலத் திருமேனியும் அதன் நிறையெழிலும் இவள் தான் தலைவி என்று பறைசாற்ற, பின்செல்லும் எழிலரசியின் உருவத்திலே ஓவியன் கருத்தையும் கவர்ச்சியையும் குழைத்து அமைத்திருக்கிறான் அமைந்த கோலமும் பணிந்த நடையும் மென்மையின் இலக்கணத்தையும் பெண்மையின் மடப்பத்தையும் காட்டுகின்றன. நிமிர்ந்த நோக்கு அங்கே இல்லை; ஆனால் அந்தப் பணிவிலே மாட்சிமை கெடவில்லை; தலைமை பறிபோகவில்லை.

கையிலே அப்பொழுது அலரும் போதை ஒருத்தி வலிய அலர்த்துகிறாள். அதை எப்படி வருணிப்பது! அவள் விரல்களே இதழ்களாகத் தோன்றுகின்றன. அந்த விரிந்த இதழ்கள் விரியாத இதழ்களை விரிக்கின்றன. மென்மலரை மென்மையாக மலரவைக்கும் மெல் விரல்களின் அழகிலே சொக்கிப் போகாதவர்கள் யார்? முடியணியின் அமைப்பும், கழுத்தணிகளின் சிறப்பும், கைவளைகளின் எழிலும் மெல்லியலாரின் அழகை மறைக்கவில்லை; அதிகமாக்குகின்றன. வலிய பாறையில் வெயிலோடு நட்பாடிக் காற்றோடு கலகலத்துப் பணியும் மழையும் குலாவிவரும் இடத்தில் மெல்லியலாரின் திருவுருவத்தையும் மென்மலர்களின் ஓவியத்தையும் அமைத்தான் ஓவியன். அவன் படைத்த ஓவியம் மென்மையை உருவாக்கிக் காட்டுகிறது; ஆனால் காலத்தை வன்மையாக எதிர்த்து வலிய பாறையிலே வாழ்கிறது.

7