பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

இலங்கைக் காட்சிகள்

ஒரு நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஆனால் அதற்கு நேரம் ஏது? ஒருவாறு எங்கள் மனத்தைத் தரைக்கு இழுத்து வந்தோம். நாங்களும் கீழே இறங்கினோம். முதலிலே சொன்ன தாழ்வாரக் குகை வழியே சென்றோம். அது மலையைச் சுற்றி வளைவாகச் செல்கிறது. அதன் முடிவிலே சில படிகள் இருக்கின்றன. அவற்றின் மேல் ஏறிச் சென்றால் மலையினிடையே முன்வாசல் போல உள்ள சிறிய வெளியை அடையலாம். அங்கிருந்து மலைமேலே செங்குத்தாக ஏறவேண்டும்.

அந்த முன் வாசலிலே வலைகளால் ஒரு சிறிய அறை கட்டியிருக்கிறார்கள். அதில் ஒரு பலகையில் ஏதோ எழுதித் தொங்கவிட்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் உள்ள அதைப் படித்துப் பார்த்தேன். "பேசாமல் போங்கள். இல்லையானால் வண்டு வந்து கொட்டும்" என்ற எச்சரிக்கையை அதிலே கண்டேன். அந்த இடத்திலிருந்து பார்த்தால் மலையின் மறுபுறம், ஓவியக் குகையின் மறுபுறம், நன்றாகத் தெரிந்தது. அங்கே பாறைகளில் மேலிருந்து பெரிய பெரிய தேன் கூடுகள் தொங்கின. அவற்றிலுள்ள கதண்டுகள் கொட்டினல் அப்புறம் மனிதன் தப்ப முடியுமா? எதிர்பாராத வகையில் கதண்டுகள் கலைந்து வந்தால் ஜனங்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றே அந்த இரும்பு வலை அறையை அங்கே கட்டியிருக்கிறார்கள். மலையின் ஒரு பக்கம் ஓவியக் குகை, கண்ணுக்கும் கருத்துக்கும் இனிமையைத் தரும் அற்புதமான சித்திரங்கள். மற்றொரு பக்கத்தில் தேன் கூடுகள்; நமக்குப் பயன்படாத தேன் கூடுகள். தப்பித் தவறி