உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



10

பொலன்னறுவை

பொலன்னறுவை !-இலங்கைச் சரித்திரத்தில் மிகவும் சிறப்பான காலத்தின் அடையாளச் சொல் இது. பெருவீரனும், தன் குலத்தை மீட்டும் நிலை நிறுத்திக் கோயிலும் குளமும் ஏரியும் அமைத்து, இலங்கை முழுதும் ஆண்டுவந்தவனுமாகிய மகா பராக்கிரம பாகுவின் புகழைப் புலப்படுத்தும் சின்னம் இது. சிற்பக்கலையும் ஓவியக் கலையும், வேளாண் திறமும் ஆட்சித்திறமும், சமயமும் அரசியலும், சைவமும் பெளத்தமும் இணைந்து நின்ற அழகு நகரம் பொலன்னறுவை சரித்திரத்தையும் இன்றுள்ள சின்னங்களையும் வைத்து ஆராய்ந்தால் இந்த மகாநகரம் நாகரிகச் சிறப்பு வாய்ந்ததாய், சிறந்த அரண்மனையும், ஆஸ்தான மண்டபமும், கோயில்களும், குளங்களும் உடையதாகி விளங்கியது என்பதை அறிந்துகொள்ளலாம். இன்று நாற்புறத்திலும் காடுகள் சூழ இடையே இடிந்த மண்டபமும் கோயிலும் நிரம்பிய பாழுராகக் கிடக்கிறது.

சிகிரியாவிலுள்ள ஓவியங்களைப் பார்த்துவிட்டு அங்கிருந்து நேரே பொலன்னறுவைக்கு வந்து சேர்ந்தோம். காட்சியின்பத்தின் பொருட்டு வருகிறவர்களுக்குப் பயன்படும்படி அரசாங்கத்தார் இங்கே ஒரு விடுதியை நடத்துகிறார்கள். அங்கே தங்கவும் உணவு கொள்ளவும் வசதிகள் செய்திருக்கிறார்கள்.