பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

இலங்கைக் காட்சிகள்

தலையாகிய விதானம் மறைந்தது போல இந்தத் திருவுருவத்தின் திருமுடியும் இப்போது காணப்படவில்லை. இத் திருக்கோயிற் சுவர்களில் பல ஓவியங்கள் மங்கியும் மாசு படிந்தும் இருக்கின்றன. புத்த ஜாதகக் கதைகளை விளக்கும் அழகான ஓவியங்கள் அவை. இந்தக் கோயில் பராக்கிரம பாகுவால் கட்டப்பெற்றது. சோழர்களுடைய ஆட்சியைத் தன் வீரத்தால் மாற்றி விறல் கொண்டவன் முதலாம் விஜயபாகு என்ற மன்னன். அவன் 1070-ஆம் ஆண்டு முதல் 1114-ஆம் ஆண்டு வரையில் ஆண்டானாம். அவன் காலத்தில் இங்கே சில டகோபாக்களும் ஆலயங்களும் மண்டபங்களும் தோன்றின. அவனுக்குப் பிறகு சில மன்னர்கள் ஆண்டார்கள். அப்பால் கி. பி. 1137-ஆம் வருஷம் முதல் 1186-ஆம் ஆண்டு வரையில் பராக்கிரமபாகு ஆட்சி புரிந்தான். அவன் காலத்திலேதான் இந்த நகரம் பல அரிய மண்டபங்களையும் திருக்கோயில்களையும் உடையதாக விளங்கியது. அவன் கட்டியதே இந்த ஜேதவன ஆராமம். அவன் காலத்தில் இங்கே அமைந்த கட்டிடங்களும் எழுதிய ஓவியங்களும் பெரும்பாலும் சோழர் சிற்பங்களையும் ஓவியங்களையும் தழுவியனவாகவே இருக்கின்றன.

ஜேதவன ஆராமத்தைப் பார்த்துக் கொண்டு கல் விகாரம் என்ற இடத்துக்குப் போனோம். அங்கே இயற்கையாக அமைந்துள்ள துறுகல்லில் மிகவும் அழகாகத் திருவுருவங்களை அமைத்திருக்கிறார்கள். அங்கே புத்தர் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தில் இரண்டு உருவங்களும், நின்ற திருக்கோலத்தில் ஒன்றும், கிடக்கும் கோலத்தில் ஒன்றுமாக நான்கு திருவுருவங்களைக் கண்டோம். அமர்ந்த திருக்கோலத்-