பொலன்னறுவை
111
அங்கே உள்ள கல்வெட்டால் தெரியவருகிறது. சிவாலயத்தை நாங்கள் பார்த்தபோது ஓர் ஆங்கிலேயர் பார்ஸிப் பெண்மணி ஒருத்தியுடன் அங்கே வந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தார். கையிலே காமிராவை வைத்துப் படம் பிடித்தார். "எங்கிருந்தெல்லாமோ அறிஞர்கள் வந்து இந்தச் சிற்பங்களைக் கண்டுகளித்துச் செல்கிறார்கள்" என்று நாங்கள் பேசிக்கொண்டோம். அந்த ஆங்கிலேயரை அங்கே பார்த்தது பெரிய காரியம் அல்ல. அவரை நாங்கள் எளிதிலே மறந்திருப்போம். ஆனால் அவரை மறக்காமல் நினைக்கும்படியாக ஒரு நிகழ்ச்சி ஏற்பட்டது.
இரண்டு நாட்கள் கழித்துப் பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. "காட்டுக்குள் சென்று காட்டு விலங்குகளின் படங்களை எடுப்பதில் பெரிய நிபுணராகிய-(பெயர் நினைவு இல்லை) பொலன்னறுவைக்குச் சென்றார். அங்குள்ள காட்சிகளைப் படம் பிடித்தார். பிறகு அருகிலுள்ள காட்டுக்குள் போனார். ஒரு யானையைப் படம் பிடித்தார். பின்னும் நெருங்கிப் படம் பிடிக்கும்போது அந்த யானை அவரைக் கொன்று விட்டது. இதுவரையில் அவர் பலமுறை யாரும் எடுக்க முடியாத நிலையில் கொடிய விலங்குகளைப் படம் பிடித்திருக்கிறார்" என்ற செய்திதான் வந்தது. பொலன்னறுவையில் நாங்கள் கண்டவரே அவர் என்று தெரிய வந்தது. அவரை நாங்கள் பாராமல் இருந்திருந்தால் இந்தச் செய்தியை மேல் எழுந்த வாரியாகப் பார்த்து அப்பால் பத்திரிகையைப் புரட்டியிருப்போம். ஆனால் நாங்கள் அவரைக் கண்டதனால், அந்தச் செய்தியைக் கூர்ந்து கவனித்தோம். மனசில்