பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

இலங்கைக் காட்சிகள்

ஏதோ ஒரு வகை வேதனை உண்டாயிற்று. நாங்கள் அவரை முன்னே கண்டதில்லை. கண்டபோதும் பேசவில்லை. ஆனாலும் அந்த அமானுஷ்யமான காட்டில் நாங்கள் ஆவலோடு பார்க்கும் காட்சிகளை அவரும் ஆவலோடு பார்த்தார். அதனால் அவருக்கும் எங்களுக்கும். ஏதோ ஒட்டுறவு இருப்பது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. அவர் எதிர்பாராத வகையில் கொல்லப்பட்டார் என்பதை அறிந்தபோது அந்த உறவுணர்ச்சி வெளிப்பட்டது. நான் அதை எத்தனையோ பேரிடம் சொல்லிவிட்டேன். கொழும்புமா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நான் சொற்பொழிவாற்றும் போதும் அந்த நிகழ்ச்சியைச் சொன்னேன். பொலன்னறுவையில் பழைய அரசுகள் மங்கி மடிந்த சின்னங்கள் நிலவுகின்றன. அவற்றை நினைக்கும்போது அந்த நினைவோடே யானையின் கையிலே முடிவைக் கண்ட போட்டோ நிபுணரின் நினைவும் என் உள்ளத்திலே தோன்றுகிறது.

அப்பால் பல இடங்களைப் பார்த்தோம். தாமரைக் குளம் ஒன்றைக் கண்டோம். அதில் தண்ணீரும் இல்லை; தாமரையும் இல்லை. ஆனால் இன்றும் தாமரைக்குளந்தான் அது; தாமரை வடிவில் கல்லால் அமைந்த அழகிய சிறிய குளம். தாமரை இதழ்களைப் போல அதன் படிகள் அடுக்கடுக்காக இருக்கின்றன. செல்வமும் பதவியும் ஆற்றலும் இருக்கலாம். அவற்றை அநுபவிக்கவும் அநுபவிக்கலாம். ஆனால் எல்லோரும் அதைக் கலைச்சுவையோடு அநுபவிப்பதில்லை. பராக்கிரமபாகு கலைச்சுவை தேரும் மன்னன் என்பதைப் பொலன்னறுவையில் இன்று இடிபாடுகளாகத் தோன்றும் சின்னங்கள் சொல்லாமல்