8
இலங்கைக் காட்சிகள்
டாக்கும் பேர்வழிகள் இருக்கிறார்கள். வரியில்லாமல் சாமான்களைக் கடத்துவது, அரசாங்க விரோதமான காரியங்களைச் செய்து விட்டு அயல்நாட்டுக்கு ஓடிவிடுவது, அயல் நாட்டினர் இங்கே வந்து எதையாவது குற்றத்தைச் செய்துவிட்டு நழுவிவிடுவது என்பவை போலப் பல வகைகளில் இரண்டு நாடுகளுக்கும் நஷ்டத்தையும் கஷ்டத்தையும் உண்டாக்கும் காரியங்கள் உண்டு. அவற்றில் ஈடுபடுபவர்களைத் தெரிந்துகொள்ளவும் தடை செய்யவுமே இத்தகைய ஏற்பாடுகளை விதித்திருக்கிருர்கள்.
போலீஸ் கமிஷனர் காரியாலயத்தில் போய்க் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறபோது இந்தச் சமாதானம் பயன்படுகிறதா ? எரிச்சல்தான் உண்டாகிறது. விண்ணப்பத்தைப் போட்டுவிட்டு, நம்மைத் தேடிக்கொண்டு வந்து விசாரித்துவிட்டுப் போகட்டும் என்று இருந்தால், 'சிவப்பு நாடா'வின் சுழலுக்குள் அந்த விண்ணப்பம் சிக்கிக்கொள்ளும். அப்புறம் நாம் போகவேண்டிய வேலையை மாசக் கணக்காக ஒத்திப் போட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
நேரிலே சென்று ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வதில் சிறிது அலுப்பு இருந்தாலும், அதில் அனுகூலம் உண்டென்பதை நான் அனுபவத்தில் உணர்ந்தேன். கமிஷனருக்கு விண்ணப்பத்தை அனுப்பிவிட்டு, நானே ஒரு நாள், "விசாரியுங்கள்" என்று சொல்லிக்கொண்டு போய் நின்றேன். நல்ல வேளை, அங்கே இந்த விசாரணையை நடத்தும் அன்பர் நல்லவராக இருந்தார். ஆசனம் அளித்து உட்காரச் செய்து பேசினர்.