பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதிர்காமம்

132

நான் கதிர்காமம் போன சமயத்தில் எந்த விதமான உற்சவமும் இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் நாங்கள் போன அப்போது கோயிலில் நாலைந்து பேர்களே இருந்தார்கள். மணிக் கணக்காக இருந்து பார்த்துக் கொண்டு வருவதற்கு ஏற்ற அமைதியும் தனிமையும் இருந்தன. நிதானமாகவே எல்லாவற்றையும் பார்த்தேன். ஆனால் "கண்டும் கண்டிலேன் என்னகண் மாயமே" என்றுதான் இப்போது சொல்கிறேன்.

அசோக வனப் பகுதிகளைப் பார்த்துக் கொண்டு இரவு முனராகந்த என்ற இடத்தில் நானும் கணேஷும் நண்பர் நாகலிங்கமும் தங்கினோம். முனராகந்த என்ற தொடருக்கு மயிற் குன்றம் என்பது பொருள். இதை நான் விசாரித்து அறிந்தபோது ஒருவகையான மகிழ்ச்சி உண்டாயிற்று. பெயர்ப் பொருத்தத்தை ஆராய்ந்தபோதுதான் அந்த மகிழ்ச்சி எழுந்தது. மறுநாள் வெள்ளிக்கிழமை காலையிலே புறப்பட்டுக் கதிர்காமம் செல்வதாக இருந்தோம். மயில் வானகப் பெருமாளைத் தரிசிக்கப் போகுமுன் மயிற் குன்றத்தில் தங்கியதிலே ஒரு பொருத்தம் இருக்கிறதா, இல்லையா, சொல்லுங்கள். மயிலுக்கும் முருகனுக்கும் உள்ள பொருத்தத்தை மாத்திரம் நினைந்து நான் களிக்கவில்லை. அதற்கு மேலும் ஒரு செய்தி என் நினைவிலே எழுந்தது.

கதிர்காமத்துக்கு ஒருமுறை புகழேந்திப் புலவர் போயிருந்தார். அப்போது ஆலயத்தின் ஒரு பகுதியிலே ஒரு மயில் நின்றிருந்தது. அது பாம்பொன்றைத் தன் அலகிலே கவ்விக்கொண் டிருந்தது.