உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புறப்பாடு

9

அவர் உட்காரச் சொன்னவுடனே நான் இலங்கைப் பிரயாணத்தில் பாதி தூரம் சென்றதுபோலவே சந்தோஷப்பட்டேன். அவர் என்னைக் கேள்வி கேட்க ஆரம்பித்தார். இரண்டு கேள்விகளுக்குப் பதில் சொன்னேன். அதற்குள் அவருக்கு வேறு வேலை வந்து விட்டது. அதைக் கவனித்தார். மறுபடியும் இரண்டு கேள்விகள் கேட்டார். அப்புறம் எங்கோ வெளியிலே போய்விட்டு வந்தார். இந்தமாதிரி விசாரணை நடந்தால் எங்கள் வினா விடைப் படலம், மாதப் பத்திரிகையில் வரும் தொடர்கதைபோல, தொடரும், தொடரும் என்று பல தடவை போடவேண்டியிருக்குமே என்ற பயம் எனக்கு உண்டாயிற்று. “உங்களுக்கு என்ன என்ன செய்திகள் வேண்டுமோ, அவற்றையெல்லாம் நானே எழுதித் தந்துவிடுகிறேன்; அதை நீங்கள் பாருங்கள்; மேலும் ஏதாவது விவரம் வேண்டுமானுல் பிறகு நான் சொல்கிறேன்" என்றேன். அந்த நண்பர் ஒப்புக்கொண்டார்.

நான் எழுத ஆரம்பித்தேன். மூன்று நீண்ட பக்கங்கள் எழுதினேன், அதற்குள் அந்த அன்பர் வேறு காரியம் பார்க்கப் போயிருந்தார். நான் என் சரித்திரச் சுருக்கத்தை எழுதினேன். 'இலங்கையில் பணம் சம்பாதிக்கும் நோக்கம் ஒன்றும் இல்லை' என்பதை ஞாபகப்படுத்திக்கொண்டு எழுதினேன். அப்படி எழுதுவது அவசியம் என்று யாரோ அன்பர் சொல்லியிருந்தார். அந்த ஞாபகம் இப்போது சமயத்தில் உதவியது.

அந்த மூன்று பக்கங்களையும் எழுதிவிட்டு ஒரு முறை திருப்பிப் படித்தேன். ‘அடடா! நம்முடைய