பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதிர்காமம்

135

ஓட்டி அக்கரை ஏறிக் கோயில் வாசலிலேயே கொண்டு போய் நிறுத்தலாம் என்று அங்குள்ளவர்கள் சொன்னார்கள். நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. காரைக் கரைக்கருகிலே நிறுத்திவிட்டுப் புறப்பட்டோம். நூற்றுக்கணக்கான மைல் காலால் நடந்து பல துன்பங்களையும் பொறுத்துக்கொண்டு கதிர்காம தரிசனத்துக்கு வரும் அன்பர்கள் இருக்கும்போது, நாங்கள் சிறிது தூரமாவது நடக்கவேண்டாமா ?

மாணிக்க கங்கையில் சில சமயம் வெள்ளம் வருமாம்.[1] அப்போது ஆற்றில் இறங்கிச் செல்ல முடியாது. அதனால் ஆற்றைக் கடக்க ஆடும் பாலம் ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அதன் வழியே சென்று அக்கரையை அடைந்தோம். இக்கரை கடந்து அக்கரைக்கு வந்தவுடன் நாங்கள் நிற்கும் இடம் சந்நிதி வீதி என்று அறிந்து கொண்டேன். வானை முட்டும் கோபுரமும் பெரிய பெரிய குளமும் உள்ள தமிழ் நாட்டுத் தலங்களைப் போன்ற இடங்கள் வேறு எங்கும் இல்லை. மாணிக்க கங்கையில் நீராடும்போது கதிர்காம ஆலயம் இன்னும் நெடுந்துாரத்தில் இருக்கும் என்று நினைத்தேன். ஆலயமென்று இருந்தால் அதன் கொடிமரமோ கோபுரமோ பூசையின் ஒலியோ நெடுந்துரத்துக்கு அப்பால் வருபவர்களுக்கு ஆலயம் இருப்பதைப் புலப்படுத்தும் அல்லவா? அத்தகைய அறிகுறி ஏதும் இங்கே இல்லை.

சந்நிதி வீதி தென் வடலாக இருக்கிறது. வடக்குக் கோடியில் கதிர்காம வேலன் திருக்கோயில்; தெற்-


  1. இரண்டாவது முறை கதிர்காமம் போனபோது வெள்ளத்தைக் கண்டேன்.