பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

இலங்கைக் காட்சிகள்

உடையது என்று தோன்றுகிறது. நம் நாட்டுக் கோயில்களில் தலவிருட்சம் இருக்கும். இக் கோயிலில் அரசமரங்கள் இருக்கின்றன.

ஆடி மாதத்தில் கதிர்காமத்தில் திருவிழா நடைபெறுகிறது. அப்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். திருநாளன்று கப்புராளைமார் எதையோ பரிவட்டத்துக்குள் வைத்து மூடிக் கொண்டு வருவார்கள். பழைய பெட்டி என்று சொல்கிறார்கள். அதைக் கொண்டுவந்து மூடிய பரிவட்டத்தோடே யானையின் மேல் ஏற்றுவார்கள். இப்படி ஏற்றும் போது யானை நிற்பதற்குரிய இடம் ஒன்று கோயிலில் இருக்கிறது. ஏற்றிய பிறகு யானை ஊர்வலமாக வரும். அதன்மேல் உள்ள பெட்டியையே யாரும் பார்க்க முடியாது. அப்படி இருக்கையில் அதற்குள் என்ன இருக்கிறதென்று தெரிந்து கொள்வது எப்படி?

பெட்டிக்குள்ளே மாணிக்கத்தால் ஆன விலை மதிக்க முடியாத முருகன் விக்கிரகம் இருக்கிறது என்று சிலர் சொல்லுகிறார்கள்.


"கனகமா ணிக்க வடிவ னேமிக்க
கதிரகா மத்தில் உறைவோனே"

என்று அருணகிரிநாதர் திருப்புகழில் பாடுகிறார். அவர் காலத்தில் முருகனுடைய திருவுருவம் எல்லாரும் கண்டு தரிசிக்கும்படி இருந்ததென்றும், பிற்காலத்தில் மாணிக்கங்களைக் கண்டு யாரேனும் கைப்பற்றி விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தால் அவ்விக்கிரகத்தை வெளிக் காட்டுவதில்லை யென்றும் சொல்கிறவர்கள் இருக்கிறார்கள்.