பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

இலங்கைக் காட்சிகள்

தென்று சிலர் சொல்கிறார்கள். சந்நிதி வீதியின் தென் கோடியில் உள்ள வள்ளியம்மை கோயிலுக்கு அருகில் மாணிக்க கங்கைக் கரையில் முத்துலிங்க சுவாமியின் சமாதி இருக்கிறது.

கதிர்காம வேலன் திருக்கோயிலுக்குப் பின்புறம் பெரிய அரசமரம் ஒன்று இருக்கிறது. பௌத்தர்களுக்கு அரசமரம் கடவுளுக்குச் சமமானது. இந்தத் தலத்துக்குப் பௌத்தர்களும் முஸ்லிம்களும் கூட வந்து வழிபடுகிறார்கள். நான் போயிருந்தபோது எங்களுடனே ஒரு சிங்களவர் வந்திருந்தார்.கோயிலில் சில முஸ்லிம்கள் வந்து தொழுவதையும் கண்டேன்.

இந்தக் கோயிலைச் சுற்றிச் சிறிய சிறிய வளைவுள்ள புரைகளில் நாகத்தின் உருவங்கள் இருக்கின்றன. அருகில் தீபம் வைத்திருக்கிறார்கள்.

இந்தக் கோயிலின் எல்லைக்கு அப்பால் கீழ்த்திசையில் இதனோடு ஒட்டிய படியே தேவயானையின் கோயில் இருக்கிறது. அது கிழக்குப் பார்த்த சந்நிதியை உடையது. அதன் விமானம் தமிழ் நாட்டுக் கோயில் விமானத்தைப் போல இருக்கிறது. ஆனாலும் அங்கும் திரைக்குத்தான் பூசை நடக்கிறது. வள்ளியம்மை கோயிலிலும் திரைதான். ஊரிலுள்ள மடங்களில் சில சந்நிதிகள் உண்டு. அங்கும் திரை போட்டிருக்கிறார்கள். கதிர்காமமே திரை மயம் !

தெய்வயானை கோயிலில் கல்யாண மண்டபம் என்ற இடம் இருக்கிறது. அங்கே ஒரு துறவி இருக்கிறார். பரம்பரையாகத் தெய்வயானை கோயிலின் நிர்வாகம் இவரைப் போன்ற துறவிகளின் கையில் இருந்து வருகிறது.