10
இலங்கைக் காட்சிகள்
சுய சரித்திரத்துக்கு இதுவே கருவாக அமையும் போல் இருக்கிறதே!' என்று எண்ணினேன். நான் என்றைக்காவது சுய சரித்திரம் எழுதுவதாக இருந்தால் இந்த மூன்று பக்கங்களும் அப்போது மிகவும் உபயோகப்படும். ஆனால் அவை கிடைக்க வேண்டுமே போலீஸ் கமிஷனர் காரியாலயத்துச் சுரங்கத்திலோ, குப்பைக் கூடையிலோ அல்லவா அது போய்ச் சேர்ந்திருக்கும்? கிடக்கட்டும், இப்போதைக்கு அந்தக் கவலை இல்லை.
என் சுய புராணத்தை எழுதி வைத்துக்கொண்டு காத்திருந்தேன். அங்கே நடைபெறும் அழகான சம்பாஷணைகளையும் வேலைகளையும் கவனிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. பாஸ்போர்ட்டுக்காக மாசக்கணக்கில் காத்திருக்கும் கனவான்கள் சிலர் உண்டு என்று தெரிந்துகொண்டேன், அரசியல் காரணங்களுக்காகப் பாஸ்போர்ட்டுக் கொடுக்காத வீரர்கள் சிலர் உண்டு என்பதையும் அறிந்தேன். அடி தடிச் சண்டை, அரசியல் பிரசங்கம், கூட்டத்தில் குழப்பம், ஒலிபெருக்கி வைக்க அநுமதி பெருமல் வைத்துப் பேசின விவகாரம், 293 செய்யாத குற்றம், 925 செய்யாத வேலை - இப்படி அந்த இடத்துக்கே உரிய பல ரகமான செய்திகள் காதில் விழுந்தன. எவ்வளவோ விஷயங்கள் எனக்குப் புரியவே இல்லை. போலீஸ் மணம் மணக்கும் அந்தச் சூழலில் உட்கார்ந்திருந்தேன்.
வேலையாகப் போயிருந்த அன்பர் வந்தார். அவரிடம் என் சுயபுராணத்தை நீட்டினேன். "நீங்கள் எம். ஏ. பட்டம் பெற்றவர்களா?” என்று கேட்டார்.