பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

இலங்கைக் காட்சிகள்

துயில் கூரும் புத்தரின் கோலம் கண்டேன். வலப்பக்கம் திரும்பி வலக்கையைத் தலையின் கீழ்வைத்துப் படுத்திருக்கிறார் அவர். சயனத் திருக்கோலத்தில் புத்தரை எங்கே கண்டாலும் வலப்பக்கம் திருப்பிப் படுத்த கோலத்தையே கண்டேன். ஆடவர்கள் இடப் பக்கம் படுக்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்வார்கள். "இடது கையிற் படுப்போம்" என்பது தேரையர் வாக்கு, பெண்கள் வலப்பக்கம் திரும்பிப் படுக்க வேண்டுமாம்.

திருமால் வலப்பக்கம் கைவைத்து அறிதுயில் புரிகிறார். திருவரங்கத்தில் அரவணையின்மேல் பள்ளி கொண்ட பெரிய பெருமாள் வலக்கையில் தலைவைத்துத் திருத்துயில் கொண்டிருக்கிறார். புத்தரும் வலக்கையில் தலை வைத்துத் துயில்கிறார். இரண்டையும் ஒன்றுபடுத்திப் பார்த்தேன். மனசு சும்மா இருக்கிறதா? முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்குங்கூட முடிச்சுப் போட்டுப் பார்ப்பது அதன் தொழில். அப்படியிருக்கச் சிறிது ஆதாரமும் கிடைத்துவிட்டால் சும்மா இருக்குமா?

புத்தரைத் திருமாலின் அவதாரங்களில் ஒன்றாகச் சொல்லுவதுண்டு. ஜயதேவர் தம்முடைய அஷ்டபதியில் தசாவதாரங்களை வருணிக்கும் இடத்தில் "புத்தசரீர" என்று பாராட்டுகிறார். புத்தர் திருமாலின் அம்சமாதலால் திருமாலைப் போலவே வலப்பக்கம் கைவைத்துப் படுத்திருக்கிறார் என்று ஒரு பொருத்தம் எனக்குத் தோன்றியது. இதை ஒரு பெரிய காரணமாகச் சொல்லி, புத்தர் திருமாலின் அவதாரந்தான் என்று சாதிக்க நான் வரவில்லை. அங்கும் இங்கும் படித்த