உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

இலங்கைக் காட்சிகள்

திருச்செங்கோட்டில் கோயில் கொண்டுள்ள அர்த்தநாரீசுவரருடைய வாமபாகம் பெண் உருவம். ஆகவே, அத்திருவுருவத்தில் இடப் பக்கம் நகில் இருக்கிறதேயன்றி வலப்பக்கம் இல்லை. ஆகையால், கண்ணகியின் உருவந்தான் அர்த்தநாரீசுவர உருவம் என்று சொல்வது சரியன்று. அன்றியும் கண்ணகி வையையாற்றங்கரை வழியே சென்று செவ்வேள் குன்றத்தை அடைந்தாள் என்று இருக்கிறது. அது வேறு குன்றமாக இருக்கவேண்டும்.

இப்படி ஆராய்ச்சி உலகத்தையும் கொஞ்சம் எட்டிப் பார்த்துவிட்டு வந்தது என் மனம், 'கடவுள் தன்மை எய்தினபோது கண்ணகி முகத்தில் சினக்குறிப்பு மாறியிருக்கும்; உடம்பில் உள்ள உறுப்புக் குறையும் மாறி இருநகிலும் அமைந்திருக்கும்' என்று சமாதானம் செய்துகொண்டேன்.

நூதன சாலையில் 'கொம்பு முறிக்கும்' கொம்பு ஒன்று இருந்தது. அதைக் காட்டி அது கண்ணகியோடு தொடர்புடையது என்று நண்பர் சொன்னார். அவரிடம் காதை அதிகமாக நீட்டினேன். அவர் விளக்கிய விஷயமும் பிறகு தெரிந்துகொண்ட செய்திகளும் இலங்கை மக்களுக்குப் பத்தினித் தெய்வத்தினிடம் உள்ள பக்தியை நன்றாகத் தெரிவித்தன.

இலங்கையில் உள்ள புத்த தேவாலயங்களில் இந்து மதத்துக்குரிய சில தெய்வங்களையும் பௌத்தர்கள் காவல் தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள். முருகன், விஷ்ணு, பத்தினி என்ற மூவரையும் பல இடங்களில் காணலாம். கத்தரகம தெய்யோ, விஷ்ணு தெய்யோ, பத்தினித் தெய்யோ என்று அவர்கள்