உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பத்தினித் தெய்வம்

39

சொல்வார்கள். பத்தினித் தெய்வம் என்பதன் திரிபே பத்தினித் தெய்யோ என்பது. கண்ணகியைப் பௌத்தர்கள் பத்தினி என்றே வழங்குகிறார்கள்.

பழங்காலத்தில் முதல்முதலில் சேரன் செங்குட்டுவன் இமாசலத்திலிருந்து கல்கொண்டு வந்து அதில் கண்ணகியின் திருவுருவத்தை வடிக்கச் செய்து அதற்குத் திருக்கோயில் கட்டி வழிபட்டான். பிறகு தமிழ் நாட்டிலுள்ள பாண்டி நாட்டிலும் கொங்கு நாட்டிலும் சோழ நாட்டிலும் அந்த நாட்டு அரசர்கள் கண்ணகிக்குக் கோயில் அமைத்து வழிபட்டு வந்தார்கள்.

அப்போது இங்கே வந்திருந்த கஜபாகு என்ற இலங்கை வேந்தன் கண்ணகிக்குத் தன் நாட்டிலும் படிமம் அமைத்து வழிபட்டான். இதைச் சிலப்பதி காரம் சொல்கிறது.

"அது கேட்டுக் கடல் சூழ் இலங்கைக் கயவாகு என்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகைக் கோட்டம் முந் துறுத்து, ஆங்கு அரந்தை கெடுத்து வரந்தரும் இவள் என, ஆடித்திங்கள் அகவையின் ஆங்கோர் பாடி விழாக்கோள் பன்முறை எடுப்ப, மழைவீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று"

என்பது உரைபெறு கட்டுரை என்ற பகுதியில் வருகிறது. கயவாகு இலங்கையில் கண்ணகிக்குக் கோயில் கட்டினான். நாள்தோறும் பூசை நடக்கும்படி செய்தான். ஆடி மாதத்தில் சிறப்பு விழா நிகழ்வித்தான். அதனால் மழை நன்றாகப் பெய்து வளம் பெருகியது. மற்ற இடங்களிலும் கண்ணகி வழிபாட்டின் பிறகு எங்கும் மழை நிறையப் பெய்தது என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.