குறிஞ்சி வளம்
47
தாக ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆயினும் போகிற வழியில் கண்டியில் பார்லிமெண்டு அங்கத்தினராகிய ஸ்ரீ இராமாநுஜத்தின் வீட்டில் இறங்கிச் சில நிமிஷங்கள் இருந்தோம். கண்டித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அவர். அவர் மனைவி ஒரு டாக்டர். அவ்விருவரும் பல அரிய தொண்டுகளைச் செய்து வருகிறார்கள். சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டுக் கிரிமெட்டியாவுக்குப் போனோம்.
கிரிமெட்டியா ஒரு பெரிய தோட்டம். அதன் தலைவர் ஸ்ரீ வைத்தியலிங்கம் நல்ல பண்பாடு பெற்றவர். முன்பு இலங்கை மேல்சபையில் அங்கத்தினராக இருந்தவர். நல்ல செல்வாக்கு உள்ளவர். தமிழில் ஆராத காதல் உடையவர். எங்களை மிக்க அன்போடு வரவேற்று உபசரித்தார். அவருடைய பங்களாவும் தோட்டமும் முன்பு வெள்ளைக்காரருக்குச் சொந்தமாக இருந்தன. லார்டு மௌண்ட்பேட்டன் துரை அங்கே வந்து சில காலம் தங்கியிருந்தாராம். அப்படியானால் அந்தப் பங்களாவில் எத்தனை சிறப்பான வசதிகள் இருக்குமென்று ஊகித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.
தேயிலைத் தோட்டத்தின் மத்தியில் ஒரு மலையின் மேல் அந்தப் பங்களா அமைந்திருந்தது. நான் தேயிலைச் செடியையே பார்த்ததில்லை. மலைமேல் எவ்வளவு உயரத்தில் அந்த மாளிகை இருக்கிறதென்று பார்க்க ஆசைப்பட்டேன். அங்கே தேயிலையைப் பக்குவம் செய்யும் தொழிற்சாலையும் இருக்கிறதென்று சொன்னார்கள். அதையும் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் இருந்தது. அப்போது இரவு ஒரு மணி. நெடுந்தூரம் பிரயாணம் செய்து வந்திருக்கிறோம்.