பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

இலங்கைக் காட்சிகள்

ஆகவே, உணவு கொண்டு படுத்தோம். 'நம்முடைய ஆசைகளெல்லாம் இப்போதைக்குத் தூங்கட்டும். காலையில் எழுந்து எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ளலாம்' என்று என் மனசுக்குச் சொல்லி அதைத் தூங்கவைத்து நானும் சுகமாகத் தூங்கினேன்.

கண் விழித்தேன். சுற்றிலும் உள்ள கண்ணாடிக் கதவுகளின் வழியே வெளிச்சம் பரவியது. விடிந்து விட்டதென்று தெரிந்தது. செங்கதிரவன் - எழுந்திருந்து நெடு நேரமாகிவிட்டதென்பதை உணர்ந்தேன். மெல்ல எழுந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வெளியே வந்தேன். அந்தப் பங்களாவின் வாசலில் வந்து நின்றேன்.

ஆ! அந்த அழகை என்னவென்று சொல்வது! அருகில் நிற்பவர்கள் என்னைச் சந்தேகிக்கும்படி, 'ஹாஹா!' என்று வாய் விட்டுக் கூறினேன். எதிரே அடுக்கடுக்காக மலைகள். மலைச்சாரலில் மேகப்படலம் படர்ந்திருந்தது. சூரியன் தன் கிரணங்களை வீசினான். அதனால் அந்தப் படலம் மெல்ல மெல்ல விலகிக் கொண்டிருந்தது. மலையென்னும் கன்னி உறக்கம் நீங்கித் தன்மேல் போர்த்திருந்த போர்வையை மெல்ல மெல்ல விலக்குவதுபோலத் தோற்றியது. கிரிமெட்டியா ஒரு மலைப் பகுதி. அதைச் சுற்றிலும் பள்ளங்கள். அவற்றையடுத்து மலைச்சாரல்கள். அந்த மலைச் சாரல்களில் படிக்கட்டைப்போல நெல் வயல்களை அமைத்துப் பயிர் செய்திருந்தார்கள். தண்ணீர் அருவியிலிருந்து வற்றாமல் வந்துகொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் பச்சைப் பசேலென்ற காட்சி.