பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறிஞ்சி வளம்

51

என்ன பொருள்?" என்று விசாரித்தேன். ஊருக்கு எப்படிப் பெயர் வந்தது என்பதை விசாரிப்பதில் எனக்குத் தனி விருப்பம் உண்டு.

கிரிமெட்டியா என்றால் வெள்ளை மண் என்று அர்த்தம்" என்றார்கள்.

அதைக் கேட்டுவிட்டுச் சும்மா இருக்கத் தோன்றுகிறதா? "கிரிமெட்டியாவுக்கும் வெள்ளை மண்ணுக்கும் என்ன சம்பந்தம்?" என்று அடுத்த கேள்வி பிறந்தது.

"கிரி என்றால் சிங்களத்தில் பால் என்று அர்த்தம்."

"ஓ. இப்போது விளங்கிவிட்டது. வெள்ளைக் காகிதத்தைப் பால் காகிதம் என்று தமிழ் நாட்டில் சொல்வதுண்டு. அதுபோல வெள்ளை மண்ணைக் கிரிமெட்டியா அல்லது பால் மண் என்று சொல்கிறார்கள் போலும்! கீரம் என்பது வடமொழியில் பாலைக் குறிக்கும் சொல். அதுவே கிரி என்று வந்திருக்கலாம். மெட்டியா என்பது மிருத்திகா என்ற வட சொல்லின் திரிபாக இருக்கவேண்டும்" என்று சொல்லாராய்ச்சியில் சிறிது நேரம் இறங்கிவிட்டேன். கண்முன்னே அழகுக் காட்சிகள் பல இருந்தன. அவற்றைக் கண்ட மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கும் போதே இந்தச் சொல்லாராய்ச்சி இடைப் புகுந்தது. எல்லாம் வாசனைப் பழக்கம். தேயிலையைப் பாடம்பண்ணும் தொழிற்சாலையை ஆறுதலாகப் பார்த்துக் கொள்ளலாம் என்று நண்பர்கள் சொன்னார்கள். ஆகவே, காலை உணவு உட்கொண்டு கண்டியை நோக்கிப் புறப்பட்டேன்.