பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

இலங்கைக் காட்சிகள்

முதல் நாள் இரவு கிரிமெட்டியாவுக்குப் போகும் போது அந்தச் சாலையையும் அதன் இருமருங்கிலும் உள்ள காட்சிகளையும் பார்க்க இயலவில்லை. இயற்கைத் தேவி திரைக்குப் பின்னே நின்ற தேவமங்கையைப் போல இருந்தாள். உடம்பெல்லாம் போர்த்து மறைந்து நின்ற கோஷா மகள்போல இருந்தாள். இப்போது இருள் போய் ஒளி வந்துவிட்டது. கண்ணை அகல விழித்துப் பார்த்தேன்.

சாலை வளைந்து வளைந்து சென்றது. மலையைச் சுற்றிச் சுற்றிக் கார் இறங்கியது. சற்றுத் தவறிவிட்டால் கிடுகிடு பாதாளத்தில் விழ வேண்டியதுதான். ஆனால் அந்தச் சாலை மிக நன்றாக அமைந்திருந்தது. காரில் பிரயாணம் செய்கிறவர்களுக்கு இலங்கையிலுள்ள சாலைகள் மிகவும் ஏற்றவை.

தேயிலைத் தோட்டங்கள் 3000 அடி உயரத்தில் இருந்தன. கீழே வரவரத் தேயிலை மறைந்தது; ரப்பர்த் தோட்டங்கள் வந்தன. மிக உயரமாக வளர்ந்திருந்தன. ரப்பர் மரங்கள். அவற்றின் பட்டையை மிக மெல்லியதாகச் செதுக்கியிருக்கிறார்கள். அப்படிச் செதுக்கின இடத்தின் வழியே ரப்பர்ப் பால் சுரக்கிறது. பட்டையைச் செதுக்கின வழியின் முடிவில் ஒரு கொட்டங்கச்சியைப் பொருத்தியிருக்கிறார்கள். செதுக்கின சுவட்டின் வழியே சென்று கடைசியில் அந்தக் கொட்டங்கச்சியிலே போய் ரப்பர்ப் பால் வடிகிறது. ஒவ்வொரு நாளும் அந்தப் பாலை எடுத்துச் சேகரிக்கிறார்கள்.

கோக்கோத் தோட்டங்கள் இரண்டாயிரம் அடி உயரத்தில் இருந்தன. அதன் இலைகள் சற்று அகல