இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1
புறப்பாடுமரகதத் தீவு!—எத்தனை அழகான பெயர்! காவியங்களிலும் நாவல்களிலும் பவளத் தீவுகளையும் ரத்தினத் தீவுகளையும் பற்றிப் படித்திருக்கிறேன். அப்படி உண்மையாகவே தீவுகள் இருக்கின்றனவோ, இல்லையோ தெரியாது. ஆனால் உண்மையிலேயே மரகதத் தீவை நான் கண்டேன். எங்கே பார்த்தாலும் இயற்கை எழில் குலுங்க, மலையும் அருவியும், பொழிலும் காடும், மரமும் கொடியும், மலரும் இலையும் செறிந்து பரந்து எங்கு நோக்கினும் கண்ணைக் கவ்வும் பேரழகோடு காட்சி அளிப்பதைக் கண்டேன். காவியங்களிலே வருணித்திருக்கும் காட்சிகளையும், சங்க நூல்களிலே நல்லிசைப் புலவர்கள் தீந்தமிழ்ச் சொற்களால் கோலம் செய்திருக்கும் குறிஞ்சி நிலத் தோற்றங்களையும் கண்ணாலே கண்டேன்.
மரகதத் தீவு என்ற அழகான பெயர் இலங்கைக்கு உரியது. “எங்கள் மரகதத் தீவுக்கு வாருங்கள்.