பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறிஞ்சி வளம்

55

மரத்தின் உச்சியிலே இருந்த பூவிலிருந்து உண்டாகிச் சிறந்த இனிய தேனடையைக் கிழித்துக்கொண்டு, பலாப் பழத்தைப் பிளந்து, இனிய மாம்பழத்தைச் சிதறச் செய்து, வாழைப் பழங்களேச் சிந்தும் ஏமாங்கதம் என்று புகழினால் திசை முழுதும் பரவிய காடு இன்று உண்டு.]

இந்தப் பாட்டை நான் நினைத்துக்கொண்டே, இதில் உள்ள காட்சிகளில் மாமரத்தைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அங்கே பார்த்தேன். அவை மட்டுமா? எத்தனை விதமான வண்ண வண்ண மலர்கள்! கார், மலையை வட்டமிட்டு இறங்கி அந்தது. அப்படி வருகையில் ஒவ்வொரு முறையும் கார் போகும் திசை மாறுமல்லவா? புதிய புதிய இயற்கை எழிற் படலத்தை எடுத்து எடுத்துக் காட்டுவதுபோல அவ்வப்போது காட்சிகள் மாறி வந்தன.

'ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் இயற்கை வளம் இப்படிதான் இருந்திருக்கவேண்டும் போலிருக்கிறது' என்று எண்ணினேன். நம்முடைய வாழ் நாளில் பல இடங்கள் வளங்கள் குன்றிப் போவதை காண்கிறோம். பல மலைகளில் அருவிகள் ஓடிப் பின்பு வறண்டு போனதைப் பார்க்கிறோம். திருவண்ணாமலையில் அருவி ஓடியதைக் கண்டவர்கள் உண்டு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருப்பரங்குன்றத்தில் அடர்ந்த காடுகளும், நீர் நிறைந்த அருவிகளும் இருந்திருக்கவேண்டும். பரிபாடல் என்ற சங்க நூலில் அந்த மலையின் வருணனை விரிவாக இருக்கிறது. அதைப் பார்த்தால் இப்போதுள்ள நிலைக்கும் அதற்கும் தொடர்பே இல்லையென்று தோன்றும்.