பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6.
கண்டி விழாக்கள்

கிரிமெட்டியாவிலிருந்து கண்டிமா நகரை வந்து அடைந்தோம். கண்டியில் உள்ள நகர மண்டபத்தில் அன்று மூன்று விழாக்கள் நடக்க இருந்தன. முதலில் பாரதி விழா; அடுத்தபடி மத்திய மாகாணத் தமிழ்ச் சங்க ஆரம்ப விழா; பிறகு அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்க ஆரம்ப விழா. பாரதி விழாவுக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பை எனக்கு அளித்திருந்தார்கள்.

கண்டிமா நகரத்தின் அழகிய காட்சி என் கண்ணைக் கவர்ந்தது. சுற்றிலும் மலைகள், ஊரின் நடுவே ஒரு பெரிய ஏரி. எங்கே பார்த்தாலும் பசுமைத் தோற்றம். அழகிய கட்டிடங்களும் கோயில்களும் சாலைகளும் அமைந்த, நாகரிக எழில் கெழுமிய நகரம் அது. இயற்கையின் எழில் சூழ இருந்து உள்ளத்தைக் கவர, செயற்கை எழில் இடையே நின்றது. இயற்கையின் ஏற்றத்தை ஒரு கணமும் மறக்க இயலாத நிலையில் கண்டி நகரம் வளர்கிறது.

"இங்கே முருகன் திருக்கோயில் இருக்கிறதா?" என்று கேட்டேன்.

"தமிழர்கள் வாழும் இடங்களில் கதிர்காம வேலனுடைய கோயில் இராத இடம் அரிது" என்றார்கள்.