உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

இலங்கைக் காட்சிகள்

இங்குள்ள இயற்கை யழகைப் பருக வாருங்கள்” என்று ஆசைகாட்டி அழைத்தார் அன்பர் கணேஷ்.

"கண்டியில் ஒரு சிறிய தமிழ் விழா நடத்தப் போகிறோம். அதோடு ஒரு தமிழ்ச் சங்கத்தையும் நிறுவப்போகிறோம். பாரதியார் திருநாளும் எழுத்தாளர் சங்க அங்குரார்ப்பணமும் நிகழ்த்த நினைத்திருக்கிறோம். நீங்கள் வந்து தலைமை வகித்துச் சிறப்பிக்கவேண்டும்” என்று அவர் எழுதினார்.

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம்[1] தமிழ் விழா மிகமிகச் சிறப்பாக நடந்தது. இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் ஆதரவில் நடைபெற்ற அந்தப் பெரிய விழாவுக்குப் பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கூடினார்கள். இலங்கையின் பல பகுதிகளிலிருந்து தமிழ் ஆர்வம் மிக்க அன்பர்கள் வந்திருந்தார்கள். தமிழ் நாட்டிலிருந்தும் பலர் போயிருந்தார்கள். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஒரு புதிய ஊக்கம் அந்தத் தமிழ் விழாவினால் உண்டாகிவிட்டது. இயல்பாகவே அவர்களுக்குத் தமிழன்பு அதிகம். இப்போது அது பன்மடங்கு பெருகி வளர்ந்தது. அதனுடைய பயனாகவே கண்டியில் செப்டம்பர் மாதத்தில் ஒரு சிறிய தமிழ் விழாவை நடத்த வேண்டும் என்ற ஆசை அந்தப் பகுதியில் உள்ள தமிழர்களுக்கு உண்டாயிற்று.

யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழ் விழாவுக்கு நான் போகவில்லை. பல காலமாக அன்பர்கள் இலங்கைக்கு வரவேண்டுமென்று அழைத்திருந்தும் சந்தர்ப்பம் கூடவில்லை. ஆனால் இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும்


  1. 19?1.