பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருவி ஒசை

69

னும் கதிரேசன்தான். உடுஸ்பத்தையில் கதிரேசப் பிரான் கோயில் இருப்பதைத் தெரிவித்து அங்கே வந்து போகவேண்டுமென்று, அந்தக் கோயிலைக் கட்டிய ஸ்ரீ கன்னையா ராஜு என்பவர் என்னையும் பிற அன்பர்களையும் அழைத்தார். கிரிமெட்டியாவிலிருந்து உடுஸ்பத்தைக் கதிரேசன் கோயிலைத் தரிசிக்கப் புறப்பட்டோம்.

மலைப் பகுதிகளின் வழியே கார் போய்க்கொண்டிருந்தது. அருகில் பள்ளமும் மேடுமான பகுதிகளில் வானை முட்ட வளர்ந்த காடுகளைக் கண்டேன். மாவலி கங்கை என்ற ஆறு நாங்கள் செல்லுமிடமெல்லாம் வந்தது. மழை பெய்திருந்தமையால் ஆற்றில் புதிய நீர் ஓடியது. செங்கலங்கல் தண்ணீரைப் பார்த்தவுடன் அந்த ஆற்றைப் பற்றி ஒரு பாட்டுப் பாட வேண்டுமென்று எண்ணினேன். காவிநிற நீரைக் கண்டவுடன் அதைக் காவியாடை பூண்ட துறவியாகச் சொல்லலாம் என்று தோன்றியது. ஓரிடத்திலும் தங்காமல் பல இடங்களுக்குச் சென்று தன்பால் வந்தாருக்கு நன்மை செய்யும் இயல்பு துறவிக்கும் உண்டு. இந்த மாவலி கங்கைக்கும் உண்டு. உண்மையான துறவிக்கு நெஞ்சில் ஈரம் உண்டு; இந்த ஆற்றுக்கோ ஈரமே இயல்பல்லவா ? துறவி உள்ளழுக்கை நீக்கி உதவுவான்; இந்த ஆறும் புற அழுக்கை நீக்க உதவுகிறது. இத்தனை ஒப்புமை உடைய மாவலிகங்கையைத் துறவாசாகச் சொல்வதில் என்ன தவறு?

கற்பனை ஓடியது. ஒப்புமைகள் ஒன்றன்மேல் ஒன்றாகத் தோன்றின. பாட்டு உருவாகிவிட்டது.