பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

இலங்கைக் காட்சிகள்

மருதூர் நாகநாதரைப் பார்த்து, "உம்முடைய பையிலே பணம் இருக்க என் துயரைச் சும்மா பார்த்திருக்கலாமா?” என்று இரண்டு பொருள் அமையும்படி புலவர் பாடினார். நாகநாதர் இதைக் கேட்டாரோ, இல்லையோ, யாரோ அன்பர் இந்தப் பாட்டைக் கேட்டு மனம் நைந்து உடனே புலவருக்கு வேண்டிய பொருளை உதவினார்.

இவ்வாறு முத்துக்குட்டிப் புலவரின் வாழ்க்கைச் செய்திகளைக் கேட்டுக்கொண்டே சிகிரியாவுக்குப் பிரயாணமானேன். தர்மசேனன் மிக்க விரைவாகக் காரை ஓட்டினான். இப்போது நாங்கள் போன சாலை காடுகள் அடர்ந்த இடம்; மலைப்பகுதி அல்ல. இரு புறமும் பல மைல் தூரத்துக்குச் செறிந்த காடுகள் இருந்தன. அந்தக் காடுகளில் யானைகள் வாழ்கின்றன. இரவு நேரத்தில் இந்தச் சாலையில் யாரும் அநேகமாகப் போவதில்லை. ஒருகால் காரில் யாரேனும் போனால் யானைகளைக் காணலாம். அவை காட்டில் உலவிக் கொண்டிருக்கையில் இரவில் சாலையைக் கடப்பதுண்டாம். அவ்வாறு கடந்து செல்வதைக் காரில் செல்பவர்கள் கண்டால் விளக்கை அவித்துவிட்டு மேலே காரை ஓட்டாமல் நின்று விடுவார்களாம். யானை கூட்டம் கூட்டமாகத்தான் செல்லும், அந்தக் கூட்டம் முழுவதும் சாலையைக் கடந்து போன பிறகே காரை ஓட்டுவார்கள். வெளிச்சம் தெரிந்தாலும் கார் வருவது தெரிந்தாலும் யானைகளிடமிருந்து தப்புவது அருமை.

நாங்கள் பகல் நேரத்தில் அந்தக் காட்டினூடே சென்றோம். பல மைல்களுக்கு இடையில் சில ஊர்கள்