பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

இலங்கைக் காட்சிகள்

"நான் என்ன செய்தால் அரசனாகலாம்?” என்று கேட்டான் கஸ்ஸபன்.

"சரித்திரத்தைக் கேட்டுப் பார்; அதுசொல்லும்."

"என்ன சொல்லும்?"

"அரச குலத்தில் பிறந்தவருக்குத் தகப்பனென்றும் மகனென்றும் ஒட்டு உறவு கிடையாது. அரசனுக்கு நூற்றுக்கணக்கான மனைவிமார் இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் பிள்ளைகள் இருக்கும். எல்லாப் பிள்ளைகளிடத்திலும் அரசனுக்கு அன்பு இருக்குமா? ஆகவே, பலமுள்ளவன் இந்த உறவு முறையையெல்லாம் பார்க்காமல் தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வான். சாமானிய மக்களின் தர்மம் வேறு; அரசனுக்குரிய தர்மம் வேறு. தனி மனிதன் செய்யும் கொலை, கொள்ளை என்பவை சமுதாய விரோதச் செயல்கள். அரசன் அவற்றைச் செய்தால் அவை, அவன் பராக்கிரமத்துக்கு அறிகுறியாகும். அரசன் தெய்வத்துக்குச் சமானம். ஆதலால் மக்கள் அவன் செய்யும் செய்கை எதுவானாலும் ஏற்றுக்கொள்வார்கள். சமய சந்தர்ப்பங்களை ஒட்டி அவன் நடந்து கொள்ளவேண்டும்."

"இத்தனையும் எதற்காகச் சொல்லுகிறாய்? நான் என்ன செய்யவேண்டும்?"

"நீ செய்வதைச் சரியானபடி செய்தால் நாளைக்கே. அரசனாகிவிடலாம். படை வீரர்கள் யாவரும் நான் சொன்னபடி கேட்பார்கள். அவர்களுடைய மன இயல்பும் போக்கும் எனக்கு நன்றாகத் தெரியும்."

மெல்ல மெல்லக் கஸ்ஸபனுடைய மனம் இந்தச் சூழ்ச்சியின் வசப்பட்டது. படைத் தலைவனும் அவ