பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிகிரிக் குன்றம்

93

இந்த மேடைவெளியிலிருந்து மலையின் பக்கத்தே ஏறுவதற்குரிய படிக்கட்டு அமைந்திருக்கின்றது. அந்தப் படிகளில் ஏறிப்போனால் 50 அடி உயரத்தில் குன்றின் பக்கவாட்டில் உட்குழிந்த பகுதி ஒன்று இருக்கிறது. அதன் கீழ்ப் பகுதியில் நன்றாகத் தளம் அமைத்திருக்கிறார்கள். மேல் பகுதி குடைபோலக் கவிந்திருக்கிறது. இந்தக் குழிவுக்குகை நீண்டிருக்கிறது. இதன் ஓரத்தில் சுவரெழுப்பி இந்தப் பகுதியைத் தாழ்வாரம்போல அமைத்திருக்கிறார்கள். இந்தத் தாழ்வாரத்தின் நீளம் 500 அடி இருக்கும். இந்தக் குழிவிலேயிருந்து 40 அடி உயரத்தில் மற்ரு குழிந்த இடத்தைக் காணலாம். இதற்குப் போக இரும்புப் படிகளை இப்போது அமைத்திருக்கிறார்கள். இந்த இரண்டாவது குகையில்தான் உலகம் போற்றும் வண்ண ஓவியங்கள் உள்ளன. இருபத்திரண்டு ஓவியங்களை இப்போது காணலாம்.

படிக்கட்டுகளில் ஏறி நண்பர்களுடன் இந்த ஓவியக் குகையை அடைந்தேன். உட்குழிந்த அவ்விடத்தில் மலையையே சுவராக வைத்து எழுதியிருந்த வண்ண ஓவியங்களைக் கண்டேன். கண் கொள்ளாத அழகு! திடீரென்று நான் காலத்தைப் பின் நோக்கிக் கடந்து சென்றேன். இரண்டாயிரம் ஆண்டுகளை ஒரு கணத்திலே கடந்தேன். திருப்பரங்குன்றத்தில் நான் நின்றேன்.

அங்கே முருகன் கோயில் இருந்தது. அடர்ந்த, மரங்களும் செடிகளும் கொடிகளும் நிரம்பி, எங்கே பார்த்தாலும் ஒரே பச்சைப் பசுங்காட்சி, சலசல வென்று அருவியின் ஓசை காதில் கேட்கிறது. மெல்ல