பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

இலங்கைக் காட்சிகள்

மெல்லக் கோயிலைப் பார்த்தேன். மலையைக் குடைந்து சிற்பங்களைச் செதுக்கியிருந்தார்கள். மண்டபம் போலக் கவிந்து குழிந்த ஓரிடத்தில் வந்து நின்றேன். அந்த இடம் முழுவதும் ஓவியமயம். எழுத்து நிலை மண்டபம் என்றும், எழுதெழில் அம்பலம் என்றும் அதைச் சொன்னார்கள். ஒரு பக்கம் ரதியின் உருவமும் அவளருகில் நிற்கும் காமனின் உருவமும் கண்ணைப் பறித்தன. அகலிகையின் கதையைச் சித்திரமாகத் தீட்டியிருந்தார்கள். மலைக் குகையையே சித்திரசாலையாகக் கொண்டு அந்தப் பாறைகளையே சுவர்களாக வைத்துச் சுண்ணத்தால் நிலைக்களத்தைச் செம்மைப் படுத்தி, வண்ணத்தால் ஓவியங்களை எழுதிய வித்தகர்களைப் பாராட்டினேன்.

இந்தப் பகற்கனவு எனக்கு உண்டாகியதற்குக் காரணம் பரிபாடல் என்ற சங்க நூல். திருப்பரங்குன்றத்தில் அந்தப் பழங் காலத்தில் வண்ண ஒவியங்கள் அமைந்த சித்திரசாலை ஒன்று இருந்தது என்பதை அந்த நூல் தெரிவிக்கிறது. சிகிரியாவில் ஓவியக் குகையிலே நான் நின்று ஒவியங்களைப் பார்த்தபோது பரிபாடலுக்குப் பொருள் பின்னும் நன்றாக விளங்கியது.

சிகிரிமலைக் குகை ஓவியங்கள் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகள் கடந்தும் இன்னும் வண்ணம் மங்காமல் திகழ்கின்றன. எல்லா ஓவியங்களும் மின்னிடை மெல்லியலாரின் எழிலுருவங்கள். மலரொடு மங்கையர் வண்ணத்திலே பளபளக்கிறார்கள். மஞ்சளும் பச்சையும் சிவப்பும் மிகுதியாக ஒளி விடுகின்றன. தளிரிடையும் விம்மிய மார்பும் நீண்ட மூக்கும் அகன்ற விழிகளும்