பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

இலங்கையில் ஒரு வாரம்

அதிகாரிகள் முதலியவர்களிடம் தாக்கல் கொடுத்துவிட்டு, விமான நிலையத்திற்கு வந்திருந்த யாழ்ப்பாணத்துத் தமிழ் அன்பர்களிடம் சற்றுத் தூரத்திலிருந்தபடியே அளவளாவிப் பேசிவிட்டு மறுபடியும் புறப்பட்டோம். அந்த மரகதத் தீவின் இயற்கை வளங்களை மேலிருந்து பார்த்துக்கொண்டே, கொழும்பு போய்ச் சேர்ந்தோம். தமிழ்ச் சங்கத்து நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தபடி கொழும்பு நகரில் டாக்டர் நெல்லைநாதன் அவர்களுடைய இல்லத்தில் தங்கினோம்.

கொழும்பில் முதன் முதலாக நான் விசாரித்த விஷயம் அங்கே உணவு நிலைமை எப்படி என்பதுதான். சில வருஷங்களுக்கு முன்னால் இலங்கையில் உணவுத் தட்டுப்பாட்டைக் குறித்து அடிக்கடி செய்தி வருவதுண்டு. இந்தியாவிலிருந்து அரிசி அனுப்பி வைப்பதற்குத் தூது கோஷ்டிகளும் இங்கே வந்ததுண்டு. அப்படியிருக்க, தற்போது இலங்கை இந்தியாவுக்கு அரிசி கடன் கொடுப்பதாக முன் வருவது எவ்வாறு சாத்திய மாயிற்று?

இலங்கையின் நிலப்பரப்பை எண்ணும்போது ஜனத் தொகை அதிகம் என்று சொல்லமுடியாது. தமிழ் நாட்டில் மூன்று ஜில்லாக்களின் பரப்புக் கொண்டது இலங்கை. வாழ்கின்ற மக்கள் சுமார் 67 லட்சம் பேர்தான். ஆயினும் இலங்கை பற்றாக்குறை நாடாகவே இருந்து வருகிறது. இலங்கை மக்களுக்குப் போதுமான உணவுப் பொருள் இலங்கையில் விளைவதில்லை. சமீப காலத்தில் விளைவிக்க முடியும் என்று எதிர்பார்க்கவில்லை.