பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

இலங்கையில் ஒரு வாரம்

என்ற மனப்பான்மை இலங்கையில் கிடையாது. ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் கோதுமை மாவைக்கொண்டு நல்ல முறையில் உயர்ந்தரகமான ரொட்டி (Baker's Bread) இலங்கையில் எங்கும் செய்யப்படுகிறது. ரொட்டிக் கிடங்குகள் (Bakery) எங்கெங்கும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையில் சாதாரணக் கடையில் வாங்கும் ரொட்டி சென்னையில் ஸ்பென்ஸர் கம்பெனியில் வாங்கும் ரொட்டியை விட மேலாயிருக்கிறது. எல்லோரும் ரொட்டி சாப்பிடப் பழகிக் கொண்டிருக்கிறார்கள்.

வாரத்துக்கு ஒரு படி அரிசிதான் ஒவ்வொருவருக்கும் ரேஷன். இந்த ஒரு படி அரிசியின் விலை ஆறணாத்தான். ஒரு படி அரிசியோடு ரொட்டி, கறி காய்கள், கிழங்குகளைக் கொண்டு திருப்தியாகச் சாப்பாடு நடந்து விடுகிறது.

அதிகப்படியாக அரிசி வேண்டுகிறவர்கள் பகிரங்கமாக வேறு கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். இலங்கையில் விளையும் அரிசிக்குக் கட்டுப்பாடு இல்லை. விலை நிர்ணயமும் இல்லை. ஒரு படி இலங்கை அரிசியின் விலை சுமார் ஒரு ரூபாய். ஆகையால் அதிகம் பேர் இந்த விலைக்கு இலங்கை அரிசி வாங்குவதில்லை.

ரேஷன் கடை அரிசியைப் பர்மாவிலிருந்து இலங்கை சர்க்கார் தருவிக்கிறார்கள். வாங்கிய விலையைக் காட்டிலும் மிகக்குறைந்த விலைக்கே கொடுக்கிறார்கள். இதில் ஏற்படும் வித்தியாசத்துக்கு இலங்கை சர்க்கார் உதவிப் பணம் (Subsidy) கொடுத்து உதவுகிறார்கள். அதாவது நஷ்டத்தைச் சர்க்கார் கணக்கில் எழுதிவிடுகிறார்கள் இந்த நஷ்டத்தைப் பொறுத்துக் கொள்ளும் பண வசதி இலங்கை சர்க்காருக்கு இருக்கிறது.