பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

இலங்கையில் ஒரு வாரம்

கொஞ்சங்கூட நன்றியில்லாமல் எதிர்க்கிறீர்களே?” என்று இலங்கையிலுள்ள ஏழரை லட்சம் ஏழை இந்தியத் தொழிலாளிகளுக்கு எடுத்துச் சொல்லலாம். “உங்களுடைய தலைவர்களைத் துரத்தி விட்டு எங்களையே தலைவர்களாக வைத்துக் கொள்ளுங்கள்!” என்றும் சொல்லலாம். யார் கேட்பது?

ஏழரை லட்சம் ஏழை இந்தியத் தொழிலாளர் என்று சொன்னதும், முக்கியமான ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது.

இலங்கை இன்று இவ்வளவு செல்வத்தில் சிறந்த நாடாயிருப்பதற்குக் காரணமானவர்கள் யார்? இலங்கையின் செல்வத்துக்கு அடிப்படை என்ன? பர்மாவிலிருந்தும், ஆஸ்திரேலியாவிலிருந்தும் தருவிக்கும் உணவுப் பொருளுக்கு அலட்சியமாகப் பணம் கொடுக்கக்கூடிய நிலைமையில் இன்று இலங்கை எதனால் இருக்கிறது?

இலங்கையின் செல்வச் செழிப்புக்குக் காரணம் அதன் வியாபாரப் பெருக்கம். இலங்கையின் வியாபாரப் பெருக்கத்துக்குக் காரணம் தேயிலையும் ரப்பரும். தேயிலை - ரப்பர்த் தோட்டங்களில் ஆதி நாளிலிருந்து உழைத்துப் பாடுபட்டு வளர்த்தவர்கள் இந்தியாவிலிருந்து, முக்கியமாகத் தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்றுள்ள தொழிலாளிகள்.

தேயிலையும் ரப்பரும் இலங்கையில் நிரம்ப உற்பத்தியாகிறது. பல தேசங்களுக்கும் போகிறது. அவற்றுக்கு நல்ல விலையும் கிடைக்கிறது. ஆகையால், ஸ்டர்லிங்—டாலர் நாணயங்களில் இலங்கைக்குப் பணம் வரவேண்டியதாகிறது. அந்தப் பணத்தில் ஒரு பகுதியைக் கொண்டு