பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

இலங்கையில் ஒரு வாரம்

சொல்வேன். தமிழ் மணம் என்பது புகையிலைச் சுருட்டைப் புகைக்கும்போது உண்டாகும் மணமாகவே இருக்கவேண்டும். யாழ்ப்பாணத் தமிழர்களோடு பழக நேர்ந்தவர்கள் யாரும் இதை எளிதில் கண்டுகொள்வார்கள்.

யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் இருக்கிறார்களே, அவர்களுடைய வாய்கள் சிறிது நேரம்கூடச் சும்மா இருப்பதில்லை. ஒன்று அவை அழகிய தமிழில் கதைத்துக் கொண்டிருக்கும்; அல்லது நறுமணச் சுருட்டைப் புகைத்துக் கொண்டிருக்கும். அவர்கள் பேசும் தமிழில் இனிய புகை மணம் கமழும் என்பதைப் பற்றி எள்ளளவும் ஐயமில்லை.

இப்படிப்பட்ட யாழ்ப்பாணத் தமிழர்களில் தமிழர் தலைவர்களில் பேராசிரியர் அருள் நந்தி ஒருவர். கொழும்பு தமிழ்ச் சங்கம் ஆரம்பித்த நாளிலிருந்து இவர்தான் அச் சங்கத்தின் தலைவர். இவர் முன்னாளில் இலங்கை அரசாங்கக் கல்வி இலாகாவில் உத்தியோகம் பார்த்தார். டிபுடி டைரக்டர் என்ற பதவி வரைக்கும் வந்தார். அதற்கு மேலே நியாயமாக டைரக்டர் பதவிக்கும் இவர் வந்திருக்க வேண்டும். ஆனால் இலங்கை சிங்கள சர்க்காரின் வேற்றுமைக் கொள்கை அதற்குக் குறுக்கே வழி மறைத்து நின்றது. நல்ல வேளையாக, இச் சமயத்தில் இலங்கையைச் சுதந்திரம் தேடிக்கொண்டு வந்தது. காந்தி மகானுடைய தவத்தினால் இந்தியாவுக்கு வந்த சுதந்திரம் இந்தியாவோடு நின்று விடவில்லை. கடல் கடந்து இலங்கைக்கும் சென்றது. பர்மாவுக்கும் ஜாவா-சுமத்ராவுக்கும் கூட அல்லவா அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது!