பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

இலங்கையில் ஒரு வாரம்

இந்த மானிட வாழ்க்கையிலிருந்து தம்மைத் தப்புவித்துக் கரைசேர்க்கும்படி கடவுளிடம் மன்றாடிக் கொண்டிருந்தாராம். அச்சமயத்தில் ஒரு கன்னியைச் சந்திக்க நேர்ந்து அவள் பேரில் மோகம் கொண்டாராம். உடனே அவருடைய மனப்பான்மை அடியோடு மாறிப் போய் விட்டதாம்! “தமிழணங்கே! உன்னுடைய காதலின் இன்பத்தை அனுபவிப்பதற்காக இந்தக் கொடிய மும் மலங்களுக்கு இடமாகிய மனிதப் பிறவியைக் கூட நான் சகித்துக் கொள்ளச் சித்தமாயிருக்கிறேன்!” என்று சொன்னாராம்.

தெய்வத் தமிழ் மொழியின் பேரில் ஸ்ரீ அருள் நந்திக்கு அவ்வளவு மோகம். கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் காரியதரிசி வித்வான் கனகசுந்தரம் அவர்களுக்கோ தமிழில் மோகம் என்பது மட்டுமல்ல; அதன் காரணமாகப் பலர் மீது கோபம். தமிழைக் குறைத்துச் சொல்கிறவர்களின் மீது கோபம். தமிழ்ச் சங்க விழாவுக்கு முட்டுக்கட்டை போட்டதாக அவருக்குத் தோன்றியவர்கள் மீது கோபம். எதிர்பார்த்த அளவு அவருடன் ஒத்துழைத்துத் தமிழ்ப் பணி செய்யாதவர்கள் மீது கோபம். இவை எல்லாவற்றையும் விட, இலங்கைக்குத் தமிழர்கள் புதிதாக வந்தவர்கள் என்று சொல்கிறார்களே, அவர்கள் மீது அவருக்கு மெத்தக் கோபம்.

“தமிழர்களா புதிதாக இலங்கைக்கு வந்து குடி யேறியவர்கள்? ஒரு நாளும் இல்லை. சிங்களவர்கள் தான் அஸ்ஸாமிலிருந்தோ, வங்காளத்திலிருந்தோ, கலிங்கத்திலிருந்தோ வந்து இலங்கையில் குடியேறினார்கள். இப்போது வந்திருக்கும் பூகம்பத்தைப் போல் அந்த நாளிலும் ஒரு பூகம்பம் வந்திருக்கும்; அதற்குப் பயந்து ஓடி வந்தார்கள். தமிழர்களாகிய நாங்கள் தான் இலங்கை-