பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

இலங்கையில் ஒரு வாரம்

அவருக்குச் சிரத்தை. கொழும்பு நகரில் ஸ்ரீ சுந்தரம் பிள்ளை, ஸ்ரீ கதிர்வேலு செட்டியார் போன்றவர்கள் செய்யும் கோயில் திருப்பணிகள் கூட்டுப் பிரார்த்தனைகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு ஊக்கத்துடன் உதவி செய்து வருகிறார்.

“வீரகேசரி”யின் செய்திப் பகுதி ஆசிரியர் ஸ்ரீ கே. வி. எஸ். வாஸ் அஸகாய சூரர். அறுபது டன் ருஷிய டாங்கி ஒன்றிடம் உள்ள வேகமும் ஆற்றலும் வாய்ந்தவர். இலங்கையில் அவருக்குத் தெரியாத பிரமுகர் அநேகமாக யாரும் இருக்க முடியாது. ஆனால் பெரும்பாலோருடைய முகம் அவருக்குத் தெரியாது. குரல் மட்டும் தெரியும். ஸ்ரீ கே. வி. எஸ். வாஸ் டெலிபோனில் கூப்பிடுகிறார் என்றால், எப்பேர்ப்பட்ட பிரமுகரும் மற்றக் காரியங்களை நிறுத்தி வைத்துவிட்டு டெலிபோனிடம் செல்வார்கள்.

தமிழ்ச் சங்க விழா உண்மையில் “வீரகேசரி” யின் விழா என்று சொல்லும்படியாக, விழாவின் நடவடிக்கைகளை அந்தப் பத்திரிகையில் பிரசுரித்திருந்தார்கள் ஸ்ரீ கே. வி. எஸ். வாஸ் ஒவ்வொரு கூட்டத்திலும் ஆஜராயிருந்தார். அவருக்குத் தமிழ்ச் சுருக்கெழுத்துத் தெரியாது. ஆனால் அவ்வளவு பிரசங்கங்களையும் எப்படித்தான் வார்த்தைக்கு வார்த்தை சரியாயிருக்கும்படி பத்திரிகையில் பிரசுரித்தார் என்பது மிக்க வியப்பளித்தது.

ஸ்ரீ கே. வி. எஸ். வாஸ், “வீரகேசரி”யின் செய்தி ஆசிரியர் என்பதைத் தவிர, இந்தியாவிலும் மலேயாவிலும் உள்ள பல பத்திரிகைகளுக்கு இலங்கை நிருபராயிருந்து வருகிறார். “வீரகேசரி” வேலைகளுக்குக் குந்தகம் நேராமல் மற்ற வேலைகளைப் பார்க்கிறார்.