பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

55

பிறகு அவருடைய வற்புறுத்தலுக்கிணங்க, ஜிந்துப் பட்டி ஸ்ரீ சுப்பிரமண்ய ஸ்வாமி கோவிலுக்குப் போய்ப் பார்த்த போது, நண்பர் சுந்தரம் அநுமதி கொடுத்தாலும் முருகன் அங்கிருந்து இலேசில் கிளம்பி விட மாட்டார் என்று நான் முடிவு செய்ய வேண்டியதாயிற்று.

கோவில் என்றால், இதுவல்லவா கோவில்? பக்தி என்றால் இதுவல்லவா பக்தி? பிரார்த்தனை என்றால், இதுவல்லவா பிரார்த்தனை?

கோவில் பிராகாரத்தில் அமைந்திருந்த விஸ்தாரமான மண்டபத்தில் அலங்கரித்த அழகிய ஊஞ்சல் மஞ்சத்தில் வள்ளி, தேவயானை சமேதராக முருகன் வீற்றிருந்தார். ஊஞ்சல் இலேசாக ஆடிக்கொண்டிருத்தது. முருகன் பக்தர்களுக்கு அருள் புரிய நெருங்கி நெருங்கி வருவது போலத் தோன்றியது.

ஸ்ரீ சுந்தரம் அவர்களும் அவருடைய சகோதரரும் பட்டை பட்டையாக வெள்ளைத் திருநீறு அணிந்து, பலப் பல ருத்திராட்ச வடங்களைத் தரித்து, சிவபக்தியே வடிவங் கொண்டவர்களாக விளங்கினார்கள். இவர் களைப் போல் இன்னும் நூற்றுக் கணக்கான அடியார்கள் அச்சபையில் சேர்ந்திருந்தார்கள். திருச்செந்தூரிலிருந்து வந்திருந்த ஒரு பக்தர் இனிய குரலில் திருப்புகழ் பாடினார். அனைவரும் ஒரு முகமாக மனங் குவிந்திருந்து பிரார்த்தனை நடத்தினார்கள். பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்படிபட்ட இடத்திலிருந்து புறப்படுவதற்கு முருகன் இலேசில் இணங்கிவிடுவாரா!

கொழும்பில் நாங்கள் தங்கிய சில தினங்களில் இன் னொரு ஆலயத்துக்குச் செல்லும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது. கொழும்புக்குப் பக்கத்தில் கப்பித்-

இல. 4