பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

59

காதுகளின் விஷயத்தில் எனக்குக் கொஞ்சம் அவநம்பிக்கைதான். அவரை ஏற இறங்கப் பார்த்து விட்டு, “எங்கே வரவேண்டும் என்கிறீர்கள்?” என்றேன். “ஆலயத்துக்கு வரவேண்டும். விழா நடக்கிறது” என்றார்.

ஒருவேளை யாழ்ப்பாணத்தில் ஆலயம் என்பதற்குப் போலீஸ் ஸ்டேஷன் அல்லது சிறைச்சாலை என்ற பொருள் இருக்குமோ என்று யோசித்தேன். எல்லாவற்றுக்கும் போய்ப் பார்த்துவிடலாம் என்று துணிந்து புறப்பட்டேன். கோயிலைச் சுற்றியுள்ள ராஜவீதிகளில் ஒன்றுக்கு வந்து சேர்ந்தோம். வண்டியிலிருந்து இறங்கி நடக்கத் தொடங்கினோம். என் சட்டைப் பையிலிருந்து கைக்குட்டையை எடுத்தேன்; அப்போது ஒரு காகிதம் கீழே விழுந்தது. உடனே அந்தப் போலீஸ் உடுப்பு தரித்த சுகாதார உத்தியோகஸ்தர் அந்தக் காகிதத்தைப் பொறுக்கி எடுத்து வீதி ஓரத்தில் வைத்திருந்த குப்பைத் தொட்டியில் கொண்டுபோய்ப் போட்டார். பிறகு நான் வேண்டுமென்றே கைக்குட்டையைக் கீழே போட்டேன். அதையும் பொறுக்கிக் கொண்டுபோய்த் தொட்டியில் போட்டார்.

“பெரியசாமி! ஜாக்கிரதை! தப்பித்தவறித் தரையில் விழுந்து விடவேண்டாம். விழுந்தால் நம்மையும் கொண்டு போய்த் தொட்டியில் போட்டுவிடப் போகிறார்!” என்று எச்சரித்தேன்.

“பார்த்தீர்களா? நம் ஊரில் கோயில் உற்சவம் என்றால் சுற்றுப் பக்கங்களில் எவ்வளவு குப்பையும் கூளமுமாயிருக்கும்? இந்த வீதிகளில் ஒரு குப்பை கூளங்கூட இல்லையே?” என்றார் தூரன்.