பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

61

யால் இடறி விழுகிற கட்டத்துக்கே திரும்பி வந்து சேரவேண்டிதுதான். யாழ்ப்பாணத்தில் எங்கே பார்த்தாலும், இடறி விழும் இடமெல்லாம், ஆசிரியர்கள் அல்லது கல்விமான்களாகவே இருப்பார்கள். நகர மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் ஒரு பிரமுகரைக் குறிப்பிட்டு, “இவர் இன்னார். பெரிய கல்விமான் (ஸ்காலர்)” என்று ஆசிரியர் பேரின்பநாயம் அறிமுகம் செய்வித்தார்.

“கல்விமான்கள் இருக்கட்டும், ஐயா! கல்விமான்களைத்தான் இந்த ஊரில் எங்கே திரும்பினாலும் பார்க்கிறோமே ! கல்விமான் இல்லாத ஒருவரைக் காட்டுங்கள்!” என்று கேட்டேன்.

அந்த நண்பரால் காட்ட முடியவில்லை. என் ஆகாசக் கோட்டை. தகர்ந்தது. கல்விமான் அல்லாத ஒருவரைக் கண்டுபிடித்தால், அவரைக் கொண்டு “கல்விமான் அல்லாதார் சங்கம்” ஒன்று ஏற்படுத்தி, அவர்களுக்குத் தனிப்பட்ட உரிமைகளும் சட்டசபை ஸ்தானங்களும் உத்தியோகங்களும் வேண்டுமென ஓர் இயக்கத்தையே ஆரம்பித்து வைக்கலாம் என்று எண்ணியிருந்தேன். அது சாத்தியமாகவில்லை!

மறுபடியும் பள்ளிக்கூட ஆசிரியர்களிடம் வருவோம். யாழ்ப்பாணத்தில் பள்ளிக்கூட ஆசிரியர்களும் அதிகம்; பள்ளிக்கூடங்களும் ஏராளம்.

“யாழ்ப்பாணத்தின் மாபெருங் கைத்தொழில் என்ன?” என்று கொழும்பில் உள்ளவர்கள் ஒரு கேள்வி போட்டுக் கொள்வார்களாம். “பள்ளிக்கூடந்தான்!” என்று பதிலும் சொல்வார்களாம். இப்படி அவர்கள் சொல்வதற்குத் தகுந்தாற்போல் ஆசிரியர் ஸ்ரீ ஹாண்டி