பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

63

6

வாஸ்கோடிகாமா என்னும் பெயர் கொண்ட கப்பல் தலைவனைப் பற்றி எப்போதோ சரித்திரப் புத்தகத்தில் படித்திருப்பதாக ஞாபகம். அந்தத் தடியன் இப்போது என் முன் எதிர்ப்பட்டால் அவன் கன்னத்தில் நாலு அறை கொடுத்துவீட்டு மறு காரியம் பார்ப்பேன் ஆனால் அவன் இறந்து தொலைந்து போய்விட்டான்! இறந்து போனவர்களின் விஷயத்தில் அஹிம்சையைக் கைக் கொள்ளுவது அவசியமில்லையென்பது என்னுடைய கொள்கை. உயிரோடிருப்பவர்களிடம் அவசியம் அஹிம்சா தர்மத்தை அனுசரிக்க வேண்டியது தான். ஏனெனில் நாம் அவர்களுடைய கன்னத்தில் நாலு அறை கொடுப்பதற்கு முன்னால் அவர்களும் நம்மோடு ஒத்துழைப்பது என்று தீர்மானித்து விடக்கூடும். இறந்து போனவர்களின் விஷயத்தில் அத்தகைய கவலை இல்லை. ஆகையால் வாஸ்கோடிகாமா மட்டும் இப்போது நம் முன்னால் வந்தால் அவன் கன்னத்தில் நாலு அறை கொடுக்கத் தயங்க வேண்டியதில்லை.

ஐரோப்பாவில் உள்ளவர்கள் கீழ் காட்டுக்கு வருவதற்கு முதன் முதலில் அந்த வாஸ்கோடிகாமாதான் வழி காட்டினானாம். அவன் ஒரு போர்ச்சுகீயன். அவனைத் தொடர்ந்து வந்த போர்ச்சுகீயர்கள் இலங்கையில் சில பகுதிகளைக் கைப்பற்றி ஆண்டு வந்தார்கள். அப்பப்பா! அவர்கள் ஆண்ட காலத்தில் யாழ்ப்பாணத்தார்கள் பட்ட அவதிகள் கொஞ்சநஞ்சமல்ல. போர்ச்சுக்கல் நாட்டார், கொடுமைக்கும் குரூரத்துக்கும் பெயர் போனவர்கள். இப்போதுகூட இந்தியா தேசத்தில் ஒருச் சாண் அகல முள்ள கோவாவில் உட்கார்ந்து கொண்டு அவர்கள்