பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

இலங்கையில் ஒரு வாரம்

என்ன பாடு படுத்துகிறார்கள், பாருங்கள்! இருநூறு முந்நூறு வருஷங்களுக்கு முன்னால் கேட்க வேண்டுமா? பற்பல கொடுமைகள் செய்து ஹிந்து மதத்தாரைக் கிறிஸ்துவ மதத்தைத் தழுவத் தூண்டினார்கள். போர்ச்சுகீய ஆட்சியின் போது யாழ்ப்பாணத்து மக்கள் இலை போட்டுச் சாப்பிடப் பயப்படுவார்களாம்! ஏனெனில் வாசலில் எச்சில் இலை விழுந்தால், இந்த வீட்டார் ஹிந்துக்கள் என்று ஊகித்துக்கொண்டு போர்ச்சுகீய அதிகாரிகள் வீட்டுக்குள் புகுந்து அதிக்கிரமம் செய்வார்களாம். இதன் காரணமாக அந்த நாளில் யாழ்ப்பாணத்தார் இலை போட்டுச் சாப்பிடுவதைக் கைவிட்டுத் தட்டில் சாப்பிடத் தொடங்கினார்கள். ஆனால் ஹிந்து மதப்பற்றை அவர்கள் இழந்துவிடவில்லை. ஹிந்து மத பக்தி காரணமாக அமாவாசையன்று மட்டும் இலையில் சாப்பிட்டுவிட்டு எச்சில் இலையைக் கூரை முகப்பில் செருகி விடுவார்களாம்! நாளடைவில் அது ஒரு குருட்டு மத சம்பிரதாயமாகி, இன்றும் யாழ்ப்பாணத்து வைதிக குடும்பங்களில் அமாவாசையன்று எச்சில் இலையைக் கூரை முகப்பில் செருகும் வழக்கம் நடைபெற்று வருகிறது!

கொஞ்சம் யோசித்துப் பார்க்கும்போது வீட்டு வாசலில் எச்சில் இலையைப் போடும் வழக்கத்தைத் தடை செய்த போர்ச்சுகீயர்களும் ஒரு நல்ல காரியத்தைத்தான் செய்தார்களோ என்று தோன்றுகிறது. எதுவும் ஒரு நன்மைக்கே என்று தெரியாமலா நம் பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்? ஆகையால் வாஸ்கோடிகாமா போனால் போகிறான் என்று அவனை மன்னித்து, கன்னத்தில் அறையாமல் விட்டுவிடுவோமாக!