பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

75

வந்து கொடுக்க வேண்டி இருந்தது. இதன் மூலம் மூன்றரை ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டது. இதைப்பற்றி முன்னம் ஒரு தடவை நான் எழுதித் தானிருக்கிறேன். ஆயினும் சமீப காலத்தில் திருவாங்கூர்ப் பகுதியிலிருந்து, “அந்தோ! கடவுளுக்கு ஆபத்து!” “ஆகா கடவுளைக் காணோம்!” என்று கூக்குரல்கள் வந்தபோது மேற்படி சம்பவம் என் நினைவுக்கு வந்தது. திருவாங்கூர்ப் பகுதியிலுள்ள கோயில்களிலிருந்து திடீர் திடீர் என்று விக்கிரகங்கள் காணாமற்போய் வருகின்றனவாம்! கடவுளின் விரோதிகள் அல்லது ஹிந்து மதத்தின் விரோதிகள் இவ்விதம் செய்கிறார்கள் என்று ஊகிக்கப்படுகிறது. ஆனால் மேற்படியார்கள் கடவுளையோ, ஹிந்து மதத்தையோ தாக்குவதற்கு இம் மாதிரி முறையைக் கையாளுவது பைத்தியக்காரத்தனமேயல்லவா?

இந்தியா தேசப்படம் கிணற்றில் விழுந்து முழுகுவதினால் இந்தியா தேசம் எவ்வித ஹானியும் அடைந்துவிடாது. அதுபோலவே, விக்கிரகங்களுக்கு ஏற்படும் ஆபத்து கடவுளையோ ஹிந்து மதத்தையோ பாதித்து விடாது. அப்படிப் பாதிக்கும் என்று நினைப்பவர்கள் அறியாதவர்கள்.

நமது முன்னோர்களாகிய மகான்கள் விக்கிரகங்களையே தெய்வம் என்று எண்ணிவிடவில்லை. எங்கும் நிறைந்த கடவுளை, நெஞ்சகத்தில் வீற்றிருக்கும் கடவுளை, நினைத்துத் துதிப்பதற்கு ஒரு சின்னமாகவே கோவில் விக்கிரகங்களைக் கொண்டார்கள். மனம் குவிந்து இறைவனை வழிபடுவதற்கு விக்கிரக ஆராதனையை ஒரு சாதனமாகவே ஏற்படுத்தியிருந்தார்கள். எனவே, இந்தியா தேசத்தின் சரித்திரத்தில் விக்கிரகங்களுக்கு அவ்வப்-